×

கலசபாக்கம் அருகே பல லட்சம் சுருட்டல் டாஸ்மாக் கடையை திறந்து கள்ளத்தனமாக மது விற்பனை: ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை திறந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எர்ணாமங்கலம் ஊராட்சி, மதுரா பாணாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போளூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, தாசில்தார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று, டாஸ்மாக் அதிகாரி விவேகானந்தன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.  ஊரடங்கு உத்தரவால் கடையை மூடுவதற்கு முன்பு 6 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடையில் இருப்பு இருந்த நிலையில், தற்போது 2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே இருப்பு இருந்தது. கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடையை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையை திறந்து பல லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

120 குவார்ட்டர் விலை 350
சேலம் மாநகரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கனஜோராக நடக்கிறது. 120 மதிப்புள்ள ஒரு குவாட்டரை 350 என்று விற்கின்றனர். இதேபோல் ஆப், புல் என்று அனைத்து சரக்குகளும் தாராளமாக கிடைக்கிறது. மாவட்ட பகுதிகளை பொறுத்தவரை டாஸ்மாக் சரக்குகளை விட, கள்ளச்சாராயமே அதிகளவில் விற்கப்படுகிறது. இதனை லிட்டர் 600 கொடுத்து குழுவாக வாங்கிக் குடிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : cigarette shop ,Kalasakkam ,Bureau of Investigation ,Task Shop , Kalasakkam, Task Shop, Liquor Store, Staff
× RELATED வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது...