×

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஒரே நாளில் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
 நாடு முழுவதும் ெகாரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மதுரையை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் நபராக பலியானார். இதையடுத்து நேற்று மேலும் இருவர் பலியாகி உள்ளனர்.  

விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து டெல்லி மத மாநாட்டிற்கு சென்ற 67 பேரில், 65 பேர் கண்டறியப்பட்டு   முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டது. அதன்படி கடந்த  31ம் தேதி, விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம்  மேலும், 6  பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்தது.  இந்தநிலையில், முதல் 3 பேருக்கு கண்டறியப்பட்டதில் ஒருவரான  விழுப்புரத்தை சேர்ந்த 52 வயதான முதியவர் நேற்று காலை மருத்துவமனையில்  உயிரிழந்தார்.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு  முதல் பலி நேற்று ஏற்பட்டுள்ளது. அவரது உடல், விழுப்புரம்  விராட்டிக்குப்பம் பாதையில் அடக்கம் செய்யும் பகுதியில்  12 அடி பள்ளம் தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, அவரது உறவினர்கள், குடும்பத்தினரையும்  தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட நிர்வாகம் மீண்டும் அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை  செய்ய முடிவு செய்துள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெல்லி சென்று வந்த 21 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் போடி, சுப்புராஜ் நகரை சேர்ந்த 56 வயதான ஆண், கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது 52 வயது மனைவிக்கு, கடந்த 2ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இப்பெண்ணின் ரத்தம், சளி பரிசோதனை செய்யப்பட்டதில், நேற்று முன்தினம் இரவு இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 22 ஆனது. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இப்பெண் நேற்று மதியம் 2.25 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் மூலமாகத்தான் இவருக்கு கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கொரோனா நோய் தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.  

இந்த பெண்ணையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பலி 3 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 3 பேருக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, புவனகிரி அருகே உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன்  1ம் தேதி  அனுமதிக்கப்பட்டார். . கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக  அனுப்பப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.் ரத்த  பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் வெளியாகும் என மருத்துவமனை  வட்டாரம் தெரிவித்தது.

இந்தநிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 4,248. அதில், இன்றைக்கு  கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 74 பேர். இதில் சென்னையை சேர்ந்தவர் ஒருவர். இவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தவர். இதன்படி கொரோனா தொற்றால் தமிழகத்தில் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,681 பேர் உள்ளனர். நேஷனல் இன்ஸ்ட்டியூட் எபிடெர்மினாலஜி என்னும் அலுவலகம் சென்னையில் இருக்கிறது. இந்த நோய் மற்றவர்களுக்கு எப்படி பரவுகிறது என்று சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தேனியில் இறந்தவர் கொரோனா பாதிப்பு உள்ளானவர் என்று கூறப்பட்டுள்ளது. அவருடைய கணவர் டெல்லி சென்று திரும்பியவர். அவருடைய மகனும் பயணம் மேற்கொண்டவர். அதனால் மறுபடியும் நீங்கள் சீக்கிரம் வந்தால் தான் சிகிச்சை கொடுக்க முடியும். அப்போது தான் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க முடியும் என்று கூறியிருந்தோம். 7 லட்சத்து 23 ஆயிரத்து 491 பேர் வீடுகளுக்கு சென்று 29 லட்சத்து 63 ஆயிரத்து 628 பேர் சோதனைக்கு உட்பட்டப்பட்டுள்ளனர். இதில் களப்பணியாளர்கள் 13,270 பணியில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து பணியில் தான் ஈடுபடுகின்றனர். இதுவரை 485 பேரில், ஒரே குரூப்பில் இருந்து கொரோனா தொற்று வந்தவர்கள் 422 பேர்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நிறைய பாசிட்டிவ் வருகிறது. அதில் ஒன்று தான் தேனியில் இறந்த நபர். இதுவரை 4,248 பேரிடம் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரைக்கும் 3,356 நெகட்டிவ் என்று வந்துள்ளது. மீதி 407 பேரின் பரிசோதனையின் முடிவுகள் வரவுள்ளது. தற்போது தமிழகத்தில் 17 இடங்களில் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் உள்ளன. விரைவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்காக லேப்டெக்னீசியன், மெக்ரோபைலாஜிஸ்ட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வாரத்திற்குள் அனைத்து இடங்களில் பரிசோதனை செய்வதற்கான இடங்களை இன்னும் அதிகப்படுத்திவிடுவோம்.

தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் வீடியோ கான்பிரன்சிஸ் மூலம் தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. புள்ளிவிவரங்கள் மாறுவதற்கு காரணம் நிறைய கொரோனா பாசிட்டிவ் வரும் போதும் அவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வரும் போதும் மாறுபடுகிறது. ஊரடங்கை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். அரசு, அவ்வப் போது கொடுக்கும் அறிவுரை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம். இந்த நோயை எப்படி கட்டுபடுத்துவது இதனால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

485 பேருக்கு பாதிப்பு
கொரோனா தொற்றால் தமிழகத்தில் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 411 பேர் இருந்தனர். நேற்று 74 பேருடன் சேர்த்து 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,681 பேர் உள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, 2 killed
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...