×

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சமூக இடைவெளி ‘மிஸ்ஸிங்’

காரைக்குடி: காரைக்குடியில் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கூட்டமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். நிகழ்ச்சி முழுவதும் ‘சமூக இடைவெளி’ பின்பற்றப்படாமல் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் ரூ.100க்கு காய்கறி தொகுப்பு மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, முழுவதும் புறக்கணிக்கப்பட்டது. காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டமாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோர் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு நிலையில், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்வதற்கு அமைச்சர் பாஸ்கரன், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சில தினங்களுக்கு முன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்குடி நகராட்சி நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாதது புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 50 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் என 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : event ,Minister , Minister, Social Gap, Missing
× RELATED நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின்...