×

தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் திருட்டு; கடன் தொல்லை இருந்ததால் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடினேன்: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி: கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நகைகள் கொள்ளை போனதாக நாடமாடியதாக தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (59). துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது 2 மகள்களும் திருமணமாகி, தூத்துக்குடியிலும், புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். வின்சென்ட்  தனது மனைவி ஜான்சிராணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்ற காலை எழுந்த ஜான்சிராணி, வீட்டின் பீரோவை உடைத்து, அதிலிருந்த 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை காணவில்லை என்று சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்நது வின்சென்ட் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததுடன், மோப்பநாய் சோதனைக்கும் விடப்பட்டது. அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் வின்சென்டிடமும், ஜான்சிராணியிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடன்தொல்லை அதிகமாக இருந்ததால், வீட்டிலிருந்த நகையை விற்று கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கத்தில்,

அவைகளை பதுக்கி வைத்துக் கொண்டு, கொள்ளை போனதாக ஜான்சிராணி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர். ஜான்சிராணி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:- தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தினேன். இதில் சீட்டு ஏலம் எடுத்தவர்கள் பணம் செலுத்தாமல் ஏமாற்றினர். இதனால் எனக்கு ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டது. வட்டி மட்டும் ரூ.35 ஆயிரம் செலுத்தி வந்தேன். இதனால் கடனை அடைக்க கணவரிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். வீட்டில் இருந்த 93 பவுன் நகையை விற்று கடனை அடைத்துக் கொள் என்று கூறுவார் என்று நினைத்தேன்.

ஆனால் நகையை விற்க அவர் சம்மதிக்கவில்லை. இதனால் நகை கொள்ளை போனது போல் நாடகமாடி, அதை விற்று கடனை அடைக்க திட்டம் தீட்டினேன். நேற்றுமுன்தினம் இரவு கொரோனா நோய் வராமல் இருக்க கஷாயம் என்று கூறி சுக்கு கஷாயத்தில் தூக்க மருந்தை கலந்து கணவருக்கு கொடுத்தேன். அவர் அசந்து தூங்கியதும், நகை வைக்கப்பட்டிருந்த அடுத்த அறைக்கு சென்று, பீரோவை திறந்து அதிலிருந்த பொருட்களை வெளியே வாரியிறைத்தேன். 93 பவுன் நகைகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து, எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் எங்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்து வைத்தேன்.

பின்னர் கணவர் தூங்கும் அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டு, அந்த அறையின் பின்புறம் வழியாக வந்து, எதுவும் தெரியாமல் படுத்துக் கொண்டேன். மறுநாள் அவருக்கு முன்பே எழுந்து நகைகள் கொள்ளை போனதாக சத்தம் போட்டேன். ஆனால் போலீசார் சிசிடிவி காமிரா மூலம் துப்புத்துலக்கி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

பாக்ஸ் லாக்கரில் இருந்த நகைகள்
வின்சென்ட், இந்த 93 பவுன் நகைகளை ஒரு வங்கி லாக்கரில் வைத்திருந்தார். அந்த வங்கியிலிருந்து அதிகாரி பேசுவதாகக் கூறி ஒரு பெண்ணை வின்சென்டிடம் பேச வைத்து, இந்த வங்கியில் லாக்கர் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், எனவே நகைகளை லாக்கரில் இருந்து எடுத்துக் கொள்ளுமாறு  அவரிடம் கூறியுள்ளனர். அதை நம்பி அவர் லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்து வீட்டில் பீரோவில் வைத்துள்ளார். போலீசார் அந்த வங்கியில் விசாரித்த போது அப்படி யாரும் வின்சென்டிற்கு பேசவில்லை என்பது தெரியவந்தது. இதில் ஜான்சிராணிக்கு உதவிய பெண் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜான்சிராணிக்கு உதவியது யார்?
இந்த சம்பவத்தில் ஜான்சிராணி கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அந்த அறையின் பின்புறம் வழியே வந்ததாக கூறுவதை போலீசார் நம்பத் தயாராக இல்லை. ஜான்சி ராணிக்கு இந்த நாடகத்தில் உதவி செய்ய வேறொரு நபரும் இருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரது செல்போனில் வேறு யாரும் பேசினார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Theft ,port employee ,Thoothukudi ,home ,robbery ,Jewel , Thoothukudi, theft, wife, confession
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...