×

கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி; மனிதர்களுக்கு சோதனை நடத்த ஆராய்ச்சிக்குழு ஆயத்தம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.  உலகளவில் பலி எண்ணிக்கை 60,112 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,089 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.அமெரிக்காவிலுள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

இதே குழுவினர் தான் கடந்த 2003 ம் ஆண்டு  சார்ஸ் நோய்க்கும், 2014ம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர். தற்போது உலகம் முழுக்க பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சார்ஸ் (sars) மற்றும் மெர்ஸ் (merz) குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே கடந்த காலத்தில் அந்த 2 வைரசுக்கும் எப்படி மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தார்களோ அதே போலவே  நிபுணர்கள் குழு கொரோனா வைரசுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

ஆம், இந்த தடுப்பு மருந்தை ஒரு எலிக்கு செலுத்தி பரிசோதனை செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அது வெற்றிகரமாக செயல்படுகிறது. அதாவது, உடலில் கொரோனா வைரஸ் தொற்று கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கின்றது. ஆகவே இந்த மருந்தை  கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.ஆனாலும் இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியதாக உள்ளது.

முதலில் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டும். ஒப்புதலை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதன் ஒப்புதல் கிடைத்த பின் மனிதர்களுக்கு உடனே சோதனை நடத்தப்படும். சோதனையில் அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். ஆனாலும் அனைத்து பணிகளுமே முடிந்து இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்றும் நிபுணர் குழுவினர் கூறினார்கள்.

Tags : team ,United States ,Research ,University of Pittsburgh ,human trials , Corona, Prevention, Medicine, America, Innovation, Rat, Trial, Success, Humans, Research Group, Preparedness
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்