×

கூலித்தொழிலாளர்களை வறுமையின் கோரத்தில் சிக்க வைத்த கொரோனா: சமூக மேம்பாட்டு அமைப்புகள் வேதனை

சேலம்:  கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள பீதியானது கூலித்தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களை வறுமையின் கோரப்பிடியில் சிக்கவைத்துள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் மூலம் பரவும் அபாய தொற்று நோய் இது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சமூக விலகலே இதன் பெரும் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரிய தீர்வாக அமையும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் தற்போது சமூக விலகல் கடை பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த மாதம் (மார்ச்) 24ம்தேதி மாலை 6மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.இம்மாதம் (ஏப்ரல்) 14ம்தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலாக்கத்தில் இருக்கும். ஊரடங்கு உத்தரவால் பெரும் தொழில்நிறுவனங்கள், சிறு,குறு தொழிற்சாலைகள், கடைகள், சுற்றுலாத்தலங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளது. விமானம், ரயில், பேருந்து என்று பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள், பாதிக்கப்படுவதை தவிர்க்க ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி, உணவுப் பொருள் வழங்கப்படும் என்றும், ₹1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பிரபலங்கள் அனைவரும் நமது உயிரை பாதுகாக்க, அனைத்து தரப்பு மக்களும் சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகள், விழிப்புணர்வு பணிகளால் கொரோனா வைரஸ் பாதிப்பானது கட்டுக்குள் வரும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். இது ஒரு புறமிருக்க இந்த கொரோனா பீதியானது அடித்தட்டு மக்களையும், ஆதரவற்றோரையும் வறுமையின் கோரப்பிடியில் சிக்வைத்துள்ளது. இதனால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்தாலும் பசியின் கோரத்திற்கு பலியாகி விடுவோமோ? என்ற அச்சமே இது போன்ற மக்களிடம் நிலவுகிறது. இது குறித்து மக்கள் சமூக மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் ஊடரங்கு உத்தரவால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடிக்கிடக்கிறது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு விடுப்பு நாளிலும் சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓரளவு நிம்மதியுடன் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

அதே நேரத்தில் விவசாய கூலி வேலைக்கு செல்வோர், நெசவுத் தொழிலாளிகள், செங்கல் சூளைகளில் வேலைக்கு செல்வோர், கட்டுமான கூலித்தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், வீதிவீதியாக சென்று சிறிய அளவிலான பொருட்களை உற்பத்தி செய்வோர், வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள், கல்குவாரிகளில் பணியாற்றுவோர், லாரி பட்டறைகள், தச்சுக்கூடங்களில் பணியாற்றுவோர், பர்னிச்சர் உற்பத்தி தொழிலாளர்கள், தையல் தொழிலாளிகள் என்று பலர், தினசரி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்துபவர்களாக உள்ளனர். இவர்கள் ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தினசரி ₹300ல் இருந்து ₹500வரை சம்பாதித்து பிழைப்பு நடத்திய நிலையில், தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

நாட்கள் செல்ல, செல்ல இது போன்ற தொழிலாளிகளின் வீட்டில் வறுமை தாண்டவமாடி பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. பிறரிடம் கடன் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது, இவர்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படியே கடன் வாங்கினாலும் 14ம்தேதிக்கு பிறகு வழக்கம் போல் இயல்பு வாழ்க்கை திரும்புமா? அப்படியே திரும்பினாலும் உடனடியாக வேலையும், கூலியும் கிடைக்குமா? என்ற கேள்வியும் இவர்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே இது போன்ற அடித்தட்டு மக்களையும், கூலித் தொழிலாளிகளையும் கருத்தில் கொண்டு, அரசு போதிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

வருவாய் இழப்பால் கடும் மனஉளைச்சல்
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இன்றைய சமூக சூழலில் அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், சோப்பு, கேஸ், மண்ணெண்ணெய், மளிகை பொருட்கள்  என்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து ஒரு சிறிய குடும்பம் வாழ, கண்டிப்பாக நாளொன்றுக்கு ₹500 வேண்டும். இந்த வகையில் 10நாட்கள் ஒரு தொழிலாளி வேலையில்லாமல் இருந்தால் அவருக்கு ₹5ஆயிரம் கிடைக்காமல் போகிறது. இந்த தொகையானது குடும்பம் நடத்துவதற்கு மட்டுமன்றி குழந்தைகளின் படிப்பு, மருத்துவ தேவைகள், குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகள் என்று அனைத்திற்கும் சேர்த்தே செலவாகிறது. இப்படிப்பட்ட சூழலில் தொடர்ச்சியாக ஒரு கூலித்தொழிலாளி வீட்டில் முடங்கி கிடப்பதால் நோய் பீதியை விட, வறுமையால் ஏற்படும் மனஉளைச்சலே அதிகமாகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு அடித்தட்டு மக்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுநிவாரணத் திட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும்,’’ என்றனர்.



Tags : wage laborers ,Corona ,Wage Laborers Corona Trapped , Poverty , wage laborers, quorum,social development ,systems
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...