×

புதிதாக கைதானவர்களை அடைத்து தனிமைப்படுத்த தமிழகத்தில் 37 கொரோனா சிறைச்சாலைகள்: வேறு சிறைகளுக்கு கைதிகள் மாற்றப்பட்டனர்

சேலம்: தமிழகத்தில் 37 சிறைகள் கொரோனா சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அச்சிறைகளில் இருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 2,400 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நன்னடத்தை கைதிகளுக்கு பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் புதியதாக கைது செய்யப்பட்டு சிறைக்கு வரும் கைதிகளை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கைதிகளுக்கென கொரோனா சிறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சிறை வீதம் 37 சிறைகள், கொரோனா சிறையாக மாற்றம் செய்து சிறைத்துறை டிஐஜி சுனில்குமார்சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சைதாப்பேட்டை, மதுராந்தகம், திருவள்ளூர், குடியாத்தம், திருப்பத்தூர், வாலாஜா, திருவண்ணாமலை, கடலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சேலம் ஆத்தூர் மாவட்ட சிறை, நாமக்கல், கிருஷ்ணகிரி, அவிநாசி, திருப்பூர் மாவட்ட சிறைகள், பவானி, குன்னூர், லால்குடி, அரியலூர், பெரம்பலூர், குளித்தலை, புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளி, தஞ்சாவூர் பாஸ்டல்  பள்ளி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மேலூர் பாஸ்டல் பள்ளி, பெரியகுளம், வேடசந்தூர், சிவகங்கை, பரமகுடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, குழித்துறை ஆகிய சிறைகள் கொரோனா குவாரன்டைன் சிறையாக மாற்றப்பட்டுள்ளது.

இச்சிறைகளில் இருக்கும் கைதிகள் அருகில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள். புதியதாக வரும் கைதிகள் கொரோனா குவாரன்டைன் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களை பரிசோதனை செய்து தனித்தனியாக வைத்திருப்பார்கள். இந்த புதிய உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி சேலம் ஆத்தூர் மாவட்ட சிறையில் இருந்த கைதிகள் 20 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். கிருஷ்ணகிரியில் இருந்த 7 பெண் கைதிகள் சேலம் பெண்கள் சிறைக்கும், நாமக்கல் சிறையில் இருந்த 3 கைதிகள் ராசிபுரத்திற்கும் மாற்றப்பட்டனர்.இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘முன்எச்சரிக்கையாக கொரோனா குவாரன்டைன் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கைதிகள் இச்சிறைக்கு கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்’’ என்றனர்.Tags : Corona Prisons ,detainees ,prisons ,Tamil Nadu: Prisoners Transferred to Other Prisons 37 Corona ,Tamil Nadu , 37 Corona prisons, Tamil Nadu , free new detainees: Prisoners, different prisons
× RELATED கிளை சிறைகளில் இன்று முதல் கைதிகளை பார்க்கலாம்