கொரோனா பரவலை தடுக்க முக்கிய சாலைகள் அடைப்பு: 5 கி.மீ சுற்றளவில் ஆய்வு

திருவள்ளூர்: டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பத்தியால்பேட்டை பகுதியை சுற்றி 3 கி.மீ., தூரம் பொதுமக்கள் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதனையடுத்து, பத்தியால்பேட்டை பகுதியை சுற்றி 3 கி.மீட்டர் தூரம் உள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடமாட்டத்தை முற்றிலும் குறைத்து, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய்த்தொற்று பரவும் பகுதியாக, திருவள்ளூர் நகரம், காக்களூர், தொழுவூர், செவ்வாப்பேட்டை, புட்லூர், சேலை, மணவாளநகர், திருப்பாச்சூர், புல்லரம்பாக்கம், தண்ணீர்குளம், கல்யாணகுப்பம் என 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளிலும், சுகாதாரத்துறையினர் ேநற்று ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான வரைபடம் தயாரித்து நகராட்சியில் 15,000 வீடுகள், ஊரகப்பகுதியில் 15,000 வீடுகள் என 30,000 வீடுகளில் ஆய்வு பணி துவங்கியது. இப்பணியில் அரசு மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், நகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், டாக்டர் சுகாதார மேற்பார்வையாளர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கொண்ட 350 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>