×

டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவசர தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வர வேண்டும் என்று அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகள் பலர் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஓரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் உடல் நிலை மோசமாகும் அபாய நிலை ஏற்படும். இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஒரு சில தனியார் மருத்துவமனைகள் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அரசு சார்பில் டயாலிசிஸ் சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மகப்பேறுக்கு வருவோரையும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காமலும் கொரோனா தொற்றுக்கு பயந்து திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மீது அரசுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் அலுவலகம் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பேறுகால பின் கவனிப்பு, டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் நோய்க்கான மருத்துவம் ஆகியவற்றை வழங்க வேண்டும். அந்த சேவைகளை வழங்க மறுப்பது முறையற்றது. இது மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது. வழக்கமாக வருவோருக்கு இந்த சிகிச்சைகளை தர வேண்டும். அரசின் இந்த அறிவுறுத்தலை மதிக்காவிட்டால் உரிய சட்டவிதிகளின் படி மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Government ,hospitals , Government cancels,accreditation , private hospitals refusing dialysis treatment
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...