×

கொரோனா பரவ அதிக வாய்ப்பு: தி.மலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை...மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தி.மலை: திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் புனித நகரமாக கருதப்படுகிறது. இந்நகரில், புகழ்பெற்ற நினைத்தாலே முக்தி தரும் ஏழு  நகரங்களில் ஒன்றான அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது.  இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு (பௌர்ணமி) நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.

வரும் 7-ம் தேதி முழு நிலவு (பௌர்ணமி) நாள் காலை 11 மணி முதல் 8-ம் தேதி காலை 8 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு  வரும் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க கிரிவலத்திற்கு தடைவிதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்தசாமி உத்தவிட்டுள்ளார். கிரிவலத்திற்கு பக்தர்களை அனுமதித்தால்,  மக்கள் கூட்டம் அலைமோதும், இதன் காரணமாக வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : corona spread ,pilgrims ,moon ,Kiriwalam ,Girivalam , More likely to spread corona:Pilgrimage to the Girivalam
× RELATED விருச்சிகம்