×

நான் ஏன்? செய்ய வேண்டும்; பிரதமரின் செயலை அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள்; கொரோனா குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவிற்கு மம்தா கருத்து

கொல்கத்தா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில் அவர் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது. வீட்டில் மக்கள் தனிமையாக உணரலாம். ஆனால், நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஒட்டு மொத்த பலமும், நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம் ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும். இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம் என்றார்.

காங்கிரஸ் விமர்சனம்

பிரதமரின் வீடியோ தகவலை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் விடுத்துள்ள அறிக்கையில், ‘பிரதமரின் உரையில் எதிர்காலத்துக்கான தொலைநோக்கு இல்லை. மக்களின் சிரமம், சுமை, நிதி நெருக்கடியை குறைக்க எந்த அறிவிப்பும் இல்லை,’ என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விளக்கு ஏற்றுதல் போன்ற அடையாளம் முக்கியம்தான். ஆனால், ஏழைகளுக்கான தாராள வாழ்வாதார உதவி, பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளும் முக்கியமானவை. பிரதமர் உரையில் இவை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்,’ என குறிப்பிட்டுள்ளார். 


Tags : PM ,Modi ,Mamta ,Corona , Why should I? have to do; You are trying to politicize the PM's action; Mamta's comment to PM Modi's video on Corona
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...