×

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்: அனைத்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மத தலைவர்களையும் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் நேற்று வரை 411 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு சுகாதாரத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி, போலீஸ் உள்ளிட்ட துறை ஊழியர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மத தலைவர்களையும் அழைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கோருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தார்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத தலைவர்களை நேற்று மாலை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமை செயலகத்தில் சந்தித்தார். தலைமை செயலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, தமிழ்நாடு தலைமை காஜி (சுன்னத்) சலாவுதீன் முகமது அயூப், தமிழ்நாடு தலைமை காஜி (ஷியா) குலாம் முகமது மகாதீஹான் உள்ளிட்ட 7 இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தின் செயலாளர் சுகதேவானந்தா, ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் பத்மஸ்தானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா பிஷப் மோகன் உள்ளிட்ட 8 கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள், குருநானக் சத்சங்க் சபையின் பொதுச்செயலாளர் பல்பீர்சிங், புளியந்தோப்பு ஜெயின் சங்கத்தின் செயலாளர் அஜித், நவ்கார்சேத்னா மஞ்ச் சவுகார்பேட்டை ஜெயின் சங்கத்தின் செயலாளர் ராஜேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகம் முழுவதும், உங்கள் அமைப்புகளுடன் பேசி, கொரோனா நோய் தீவிரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் பேசி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட அனைத்து சமுதாய நிர்வாகிகளும், “தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியிடாமல், உண்மையான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா நோயை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்று உறுதி அளித்தனர்.

Tags : Chief Secretary ,Tamil Nadu Nadu: All Religious Leaders ,Counsel , Tamil Nadu, Corona, religious leaders
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...