×

கொரோனா துளிகள்

நீங்கள் ஏன் கட்டாயம்  வீட்டில் இருக்க வேண்டும்?
முடக்க காலத்திலும், சாலைகளில் அதிகளவு மக்கள் நடமாடுகின்றனர். கொரோனா பரவலை தடுக்க, நீங்கள் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கு, இங்கே 5 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொடர்பில் வைரஸ் பரவுகிறது
மக்கள் நெருக்கமாக இருக்கும்போது, வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் எச்சில் அல்லது சளி மூலம் வைரஸ் பரவுகிறது. பொது இடங்களுக்கு அவர் செல்லும்போது, அவர் தொடும் இடங்கள், பொருட்களில் வைரஸ் ஒட்டிக் கொள்கிறது. அதை வேறு நபர்கள் தொட்டு கண், மூக்கு மற்றும் வாயை தொடும் போது நோய் தொற்றுகிறது.

நெருங்கிய தொடர்பு இன்றியும் பாதிக்கும்
நோய் பாதித்தவருடன் நேரடி தொடர்பு இல்லாமல், கடைகளில் பணியாற்றியவர்கள், அங்கு சென்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். லிப்ட் பட்டன்கள், குழாய்களை தொட்டதன் மூலமாக இவர்களுக்கு மறைமுகமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பரவலை ஊரடங்கு குறைக்கும்
பாதிக்கப்பட்ட நபரை வீட்டுக்குள் தனிமை படுத்துதல், பள்ளிகளை மூடுதல், போன்ற சமூக இடைவெளி நடவடிக்கைகள், நோய் பரவலை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது, லண்டன் இம்பீரியல் கல்லூரி சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. மேலும், திடீரென ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள அரசு தயாராவதற்கும் இந்த சமூக இடைவெளி நடைமுறைகள் நேரம் அளிக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவுக்கு உதவிய முடக்கம்
சீனாவின் வுகான் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு சீனா தடை விதித்ததால்தான், கொரோனா வேறு நகரங்களுக்கு பரவாமல் முடிவுக்கு வந்ததாக ஐநா.வின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு நோய் பரவுவதை அதிகளவில் கட்டுப்படுத்தவும் இந்த முடக்கம்தான் உதவியது.

பாதிக்கப்பட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்
நோய் பரவலை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட நபர்கள் பிறருக்கு நோயை பரப்பும் முன், அவர்களை அரசு அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்.  இந்த முடக்க கால நேரத்தை, வென்டிலேட்டர்கள் தயாரிக்க, சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்ய, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அரசு பயன்படுத்தி கொள்ள முடியும்.


Tags : Corona ,Doctors ,Ayush , Corona Infection, Ayush Doctors
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...