×

கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் அரசு அலட்சியம் தெர்மல் ஸ்கேனர் இல்லாமல் வீடு வீடாக ஆய்வு

சென்னை: கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், தெர்மல் ஸ்கேனர் இல்லாமல் வீடு வீடாக எப்படி சல்லடை போட்டு நோயாளிகளை தேட முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.   தமிழகத்தில் ெகாரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 12 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 5 சதுர கி.மீ சுற்றளவில் வாழும் 3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.  சமுதாய பரவலை தடுக்க, கொரோனா வைரஸ் உறுதி  செய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றி 8 கி.மீட்டர் தூரம் வரை  தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு  அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வீடுவீடாகச் சென்று நோய் தொற்று கண்டறியும் பணியை செய்து வருகின்றனர். சென்னையில் குறிப்பாக நோய் தொற்று கண்டறியப்பட்ட சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளில் களப்பணியாளர்கள் சல்லடை போட்டு பரிசோதிப்பதாக கூறப்பட்டது.  பல வீடுகளில் கதவை திறப்பதில்லை. அந்த வீடுகளிலும் களப்பணியை முடித்துவிட்டதாக குறிப்பெடுத்து செல்கின்றனர். இதன் மூலம் நோய்வாய்பட்ட நிலையில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வாய்ப்பில்லை. எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதோ அதற்கான ரிசல்ட் கிடைக்கவும் வாய்ப்பில்லை.  குறிப்பாக சுகாதார ஊழியர்கள் யாரும் இந்த குழுவில் வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஆய்வு செய்ய செல்லும் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்பதை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தால் மட்டுமே இதுபற்றிய விபரங்களை சேகரிக்க முடியும். ஆனால் எத்தனை பேர் இருக்கிறார்கள்?.

யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா? என்று வாயளவில் கேட்டு விட்டு வந்தால் எப்படி சல்லடை போட்டு தேடும் பணி வெற்றியடையும்.  இப்படிப்பட்ட ஆய்வின் மூலம் வீடுகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்கள் மட்டுமே அரசுக்கு கிடைக்கும். அதை வைத்து கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது கேள்விக்குறியாகத் தான் இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. எனவே தமிழக அரசு உரிய பரிசோதனை கருவிகளுடன், சுகாதார ஊழியர்களுடன் இப்பணியை செய்தால் மட்டுமே நோய் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கபசுர குடிநீர் விநியோகம்
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் பயன்படுத்தலாம் என்று மத்திய ஆயுஷ் நிர்வாகம் அனைத்து மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு வெளிப்படையாக தற்ேபாது வரை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர் கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.



Tags : Corona, Government of Tamil Nadu, Thermal Scanner
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...