×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் இருந்து ஆம்னி பஸ், அரசு பஸ்சில் வருகை: மாநகராட்சி சார்பில் ‘ரூட் மேப்’ வெளியிடப்பட்டது

நாகர்கோவில்:  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் சென்னை வந்து அங்கிருந்து அரசு பஸ், ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்கு வருகை தந்ததாக மாநகராட்சி சார்பில் ரூட் மேப் வெளியிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான ரூட் மேப் சுகாதாரத்துறையால் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கொரோனா தொற்று மற்றவர்களுக்கும் பகிரப்பட்டதா என்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
இதில் நாகர்கோவில் டென்னிசன் ரோடு பகுதியை சேர்ந்த 62 வயது நபர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை டெல்லி நிஜாமுதீனில் தங்கியுள்ளார். 23ம் தேதி அங்கிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்துள்ளார். அங்கிருந்து விஸ்தாரா விமானத்தில் சென்னைக்கு 23ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டுள்ளார். 23ம் தேதி இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து எஸ்இடிசி பஸ்சில் மதுரைக்கு 24ம் தேதி இரவு 1 மணிக்கு வந்துள்ளார். 24ம் மாலை 6 மணிக்கு வடசேரி வந்த அவர் சொந்த வாகனத்தில் வீட்டிற்கு சென்றடைந்துள்ளார் என்று அவருக்கான ரூட் மேப் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை போன்று வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த 34 வயதான மற்றொரு நபர் 23ம் தேதி இரவு 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு அன்று இரவு 10.55 மணிக்கு சென்னை வந்து சேர்ந்துள்ளார். அங்கிருந்து ஓலா வாகனத்தில் அதிகாலை 1.30 மணிக்கு கோயம்பேடு வந்தார். ஆம்னி பஸ்சில் புறப்பட்டவர் வரும் வழியில் மதுரையில் இறங்கி ஓட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தவர் அங்குள்ள மசூதிக்கு சென்று குளித்துள்ளார்.  அங்கிருந்து அவரது சகோதரர் பைக்கில் நாகர்கோவிலில் உள்ள வீட்டிற்கு 24ம் தேதி மாலை 6 மணிக்கு அழைத்து வந்துள்ளார்.இதனை போன்று மற்றவர்களின் ரூட் மேப் வெளியிடவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் பழகியவர்கள், தொடர்பு உடையவர்கள் சுகாதாரத்துறை பணியாளர்களையோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Coronation victims ,Omni ,corporation ,Chennai , Coronavirus victims, state bus,corporation
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து