×

கொரோனாவால் சீசன் துவங்கியும் ‘வெறிச்’ கொடைக்கானலில் கொண்டாட்டம் ‘கட்’

* சுற்றுலா தொழில்கள் முடக்கம்  * பல லட்சம் காய்கறிகள் தேக்கம்

கொடைக்கானல்: இதமான பருவநிலையுடன் சீசன் துவங்கிய நிலையில், கொரோனாவால் கொடைக்கானல் முற்றிலும் களையிழந்து காட்சியளிக்கிறது. சுற்றுலாத்தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் பெருமளவில் தேக்கமடைந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன், இதமான பருவநிலையுடன் துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதலே கொடைக்கானலுக்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை துவங்கி விடும். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கொடைக்கானலை முற்றுகையிடுவர்.

தற்போது கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே முடக்கி விட்டதால், சீசன் துவங்கியும் ரசிக்க சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் கொடைக்கானல் களையிழந்து காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகளை சார்ந்த தொழில்களை செய்து வரும் சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகள், உணவங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்து ஏரிக்கரையில் குதிரை சவாரி செய்பவர்கள் கூறுகையில், ‘‘குதிரைகளுக்கு தீனி வாங்ககூட பணமில்லாமல் சிரமப்படுகிறோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.காய்கறிகளும் தேக்கம்: கொடைக்கானல் கீழ், மேல்மலை பகுதிகளில் பணப்பயிர்கள் என்று அழைக்கப்படும் பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன.
தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காய்கறிகளில் 30 சதவீதம் அளவுக்கே மதுரை, ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்ப முடிகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் தேங்கி கிடக்கின்றன.

இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘உள்ளூர் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. அனைத்தும் அழுகி வருகின்றன. இதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

செடிகளிலேயே வாடும் ‘கொய் மலர்கள்’
திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் மேடைகளை அலங்கரிக்க பயன்படும் ‘கொய் மலர்கள்’ ஆன ஜெர்பரா, அந்தூரியம், கார்னேசன் உள்ளிட்ட மலர்கள் கொடைக்கானலில் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, கவுஞ்சி, மன்னவனூரில் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் இருந்து பெங்களூருக்கு பெருமளவில் அனுப்பப்படும் கொய் மலர்கள், அங்கிருந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களில் பறக்கின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தலால், கொய் மலர்கள் செடிகளிலேயே வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் வருமானமிழந்து பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுத்தான் இந்த கொய்மலர் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது மலர்கள் பறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றனர்.



Tags : season ,celebration ,Corona ,Season Starts ,Corona Celebrates ,Maniac' Kodaikanal , Corona, Celebrates, Starts
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு