காஞ்சி, செங்கை, ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதால் 3 கிமீ சுற்றளவுக்கு சாலைகள் மூடல்: மொளச்சூர் கிராமத்துக்கு சீல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 3 கிமீ சுற்றளவுக்கு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மொளச்சூர் கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பும், மக்கள் இடையே கடும் பீதியும் ஏற்ட்டுள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு காஞ்சிபுரம் வந்த இஸ்லாமியர்கள் 16 பேர், காந்தி ரோடு பள்ளிவாசலில் தங்கினர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தங்கியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனர்.  இதனால் காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, காஞ்சிபுரம் தேரடி, ஒலிமுகமதுபேட்டை, பெரிய காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 கிமீ சுற்றளவுக்கு அனைத்து சாலைகளுக்கும் சீல் வைத்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.இதையொட்டி, பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரம், ஒலிமுகமதுபேட்டை, மூங்கில் மண்டபம், தேரடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மளிகைக்கடை, பால், காய்கறி வாங்குவதற்கு மக்கள் வெளியில் செல்லமுடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அரசு கொரோனா நிவாரணமாக ரேஷன் கடையில் வழங்கும் உதவித்தொகையும் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே மொளச்சூர் கிராமம் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சுகாதார துறையினர், அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால், கிராம மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, மொளச்சூர் கிராமத்தை சுற்றி 7 கிமீ சுற்றளவில் உள்ள சந்தவேலூர், திருமங்கலம், மாம்பாக்கம், எச்சூர், சோகண்டி, காந்தூர், செல்வழிமங்கலம், சேந்தமங்கலம், குண்ணம், ஆரனேரி உள்பட 15 கிராமங்களில் சுகாதார துறையினர் ஆய்வு செய்கின்றனர். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனி தலைமையில் மருத்துவ குழுவினரின் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு பரிசோதனை செய்கின்றனர். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோரின் பட்டியலை சேகரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், மொளச்சூர் ஊராட்சி எல்லைகளுக்கு சீல் வைத்து, வெளியாட்கள் உள்ளே வராமலும், யாரும் வெளியே செல்லாமலும் சுங்குவார்சத்திரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு சின்னநத்தம் சுந்தரவிநாயகர் தெருவில் வசிக்கும் 44 வயது கொண்ட ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பினார். இதையறிந்த மருத்துவ குழுவினர், அங்கு சென்று அவரை பரிசோதித்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அவர் தங்கியிருந்த சின்னநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள வேதப்பர் தெரு, சுண்ணாம்புக்கார  தெரு ஆகிய தெருக்களில் தடுப்பு அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் நகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் இடையே கடும் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>