×

ஜோர்டானில் சிக்கியுள்ள மலையாள படக்குழுவினரை மீட்க தனி விமானம் அனுப்ப இயலாது: மத்திய அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: ஜோர்டானில் சிக்கி தவிக்கும் கேரள படக்குழுவினரை மீட்க தனி விமானம் அனுப்ப இயலாது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள இயக்குநர் பிளஸ்ஸி, நடிகர் பிருத்விராஜை கதாநாயகனாக வைத்து ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் பிரகாஷ்ராஜூம் நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்து வந்தது. பாலைவனத்தை ஒட்டியுள்ள முகாமில் படக்குழுவினர் 58 பேர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் ெகாரோனா பரவலை தடுக்க படப்பிடிப்பை நிறுத்துமாறு ஜோர்டான் அதிகாரிகள் கூறினர். என்றாலும் இந்திய வெளியுறவுத்துறை வேண்டுகோளை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து நேற்று முன்தினம் அங்கிருந்து திரும்ப அனைவரும் தீர்மானித்திருந்தனர். ஆனால் விமான போக்குவரத்து இல்லாததாலும், ‘லாக்-டவுண்’ அறிவிக்கப்பட்டுள்ளதாலும் அனைவரும் முகாமில் சிக்கிஉள்ளனர். மேலும் ஏப்ரல் 8ம் தேதியுடன் இவர்களின் விசா காலாவதியாகிறது. எனவே தங்களை மீட்க நடவடிக்கை கோரி படக்குழுவினர் கேரள மற்றும் மத்திய அரசை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது பேஸ்புக்கில் பதிவில், ‘‘எங்களது விசா 8ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை எந்த சிரமமும் இல்லை. எங்களுடன் ஒரு ஜோர்டான் டாக்டரும் உள்ளார். 3 நாட்களுக்கு ஒருமுறை அவர் எங்களை பரிசோதித்து வருகிறார்’’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் கூறுகையில், ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களை மீட்டுவர சிறப்பு தனி விமானத்தை அனுப்ப கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தனி விமானம் அனுப்ப இயலாது. விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பின்னரே அவர்களை ஊருக்கு அழைத்து வர முடியும். அதுவரை அவர்கள் அங்கே தங்கியிருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.


Tags : crew ,Malayalee ,Minister for Information ,Jordan , Jordan, the Malaysian Legislature, the separate aircraft, the Union Minister
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு