×

தெலங்கானாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி: டாக்டர் மீது சரமாரி தாக்குதல் நோயாளிகள் 4 பேர் மீது வழக்கு

திருமலை: தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பாதித்த 3 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற கொரோனா நோயாளிகள் 4 பேர், டாக்டரை சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் காந்தி அரசு மருத்துவமனை, யசோதா  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இந்நிலையில் காந்தி அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உறவினர்களும் அங்கு கொரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனது உறவினர் இறந்ததை அறிந்த அவர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த டாக்டரிடம், ‘உங்களின் அலட்சியத்தால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. இன்னும் எத்தனை பேரை சாகடிக்க போகிறீர்கள்?’ எனக்கேட்டு அவரை சரமாரி தாக்கினார்களாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மருத்துவமனை காவல் நிலைய போலீசார் டாக்டரை மீட்டு, நோயாளிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் மருத்துவ கண்காணிப்பில் வைத்தனர். இந்நிலையில் டாக்டர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்டர் மீது தாக்குதல் நடத்திய 4 கொரோனா நோயாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார், மருத்துவத்துறையினருக்கு முழு சம்பளம்:
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடிவு செய்திருந்தார். இந்நிலையில் போலீசார் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதோடு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா அச்சத்தில் தவறி விழுந்த முதியவர் கத்தி குத்தி பலி :
தெலங்கானா ராகவாபுரத்தை சேர்ந்த 55 வயதுக்கு மேற்பட்ட தம்பதி ஒருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தம்பதியினர் நேற்று முன்தினம் சமையல் அறையில் இருந்த காய்கறி மற்றும் கத்தியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தனர். அப்போது, அந்த முதியவர் தனது மனைவியிடம் எனக்கு கொரோனா வந்திருக்குமோ என அச்சத்துடன் கேட்டவாறு வந்தார்.

அப்போது திடீரென அவர் கால் தவறி தலைகுப்புற கீழே விழுந்தார். இதில் அவர் கையில் வைத்திருந்த கத்தி அவரது மார்பில் பாய்ந்ததில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிந்தலபுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

Tags : Telangana Coroner ,Doctor ,Coroner ,Telangana , elangana, Corona, Doctor, Patients, Case
× RELATED பூசணி விதையின் பயன்கள்!