×

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரும் சேர்ப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முக்கிய சாலைகளில் அத்தியாவசியமில்லாமல் சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையாக அரக்கோணத்தில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படையினரும் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, கடற்கரை சாலையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 30க்கும் மேற்பட்டோர் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். அதில், “144 தடை காலத்தில் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே செல்ல வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், குழந்தைகள், முதியோர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறும்போது, “அரக்கோணத்தில் 956 மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த படையினரை சென்னைக்கு 80, மதுரை 80, திருச்சி 40, திருநெல்வேலி 80, கோவை 80 என இதர மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுவார்கள்” என்றார்.

Tags : State Disaster Rescue Squadron , Tamil, Coronavirus
× RELATED ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை...