×

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு: சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.   சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  கொரோனாவைரஸ் நோய் (கோவிட்-19) தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62ன் கீழ் பொதுசுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க ேவண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76ன்படி தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு/தனியார் அலுவலகங்கள்/ மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்கள், மாணவ, மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவசோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும். கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொதுசுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம் மற்றும் அனுமதி ரத்து செய்யப்படுவது உடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வபோது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய் தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897ன் கீழ் கொடுக்கப்படுகிறது. இந்த அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188ன் கீழ் ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu: Health Department ,country , Tamil Nadu, Coronavirus, Department of Health
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!