×

ஊரடங்கால் 30 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்: தினமும் 5 கோடி உற்பத்தி இழப்பு: விசைத்தறியாளர்கள் கவலை

ஈரோடு: ஈரோட்டில் ஊரடங்கு உத்தரவால் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தினமும் 5 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர். ஈரோடு பகுதிகளில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம், 1.20 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த விசைத்தறிகள் மூலம் தினமும் 2 லட்சம் மீட்டருக்கு ரேயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற துணி ரகங்கள் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த 22ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏப்.14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், நெசவாளர்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்மூலம், தினமும் 5 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. விசைத்தறியாளர்கள் மின் கட்டணம் செலுத்த கூட பணம் இல்லாத நிலையில் தவித்து வருவதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது: கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாங்கள் கையில் வைத்திருந்த பணத்தை தொழிலாளர்களுக்கு சம்பளமாகவும், பிற செலவுகளுக்காகவும் வழங்கி விட்டோம். ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வரும் வசூலை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணியிருந்தோம். ஆனால், ஊரடங்கு 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கையில் பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். விசைத்தறி கூடங்கள் வரும் 18ம் தேதி மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால், கையில் பணம் இல்லாததால் மின் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மின்வாரியம் கட்டணத்தை மூன்று தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

சிறு, குறு தொழில்களுக்கு இதுபோன்ற நெருக்கடியை காரணம் காட்டி நிதியுதவி செய்ய வேண்டும். விசைத்தறியாளர்கள் வங்கிகளில் பெற்ற கடன் தவணை தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுப்பதை தடுக்க வேண்டும். 14ம் தேதிக்கு பிறகு தொழிலை சிரமமின்றி தொடர விசைத்தறி கூடங்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Curfew, power looms termination of the power-loom
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!