முக கவசம் அணியாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவும்... சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானியான டாக்டர் ஜார்ஜ் காவோ விளக்கம்

சென்னை: கடந்த ஜனவரியில் கோவிட் 19 வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில், முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு நேரடியாக சிசிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் டாக்டர் ஜார்ஜ் காவோ.சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானியாக உள்ளார். அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை மட்டுமே கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவரான இவருக்கு கீழ் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் ஊழியர்களும் ஆராய்ச்சியாளர்களும் பணியாற்றுகிறார்கள். 2020 ஜனவரியில் கோவிட் 19 வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில்,

முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு நேரடியாக சிசிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் இவர். பிரபல மருத்துவப் பத்திரிகையான ‘த லான்செட்’ தவிர இங்கிலாந்து மருத்துவ இதழிலும் கோவிட் 19 தொடர்பாக இரு விரிவான ஆய்வுக் கட்டுரைகளை சமீபத்தில் ஜார்ஜ் காவோ எழுதியிருக்கிறார். கோவிட் 19 தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களுக்கும், சர்வதேச விஞ்ஞானிகளுக்கும் இப்போது ஜார்ஜ் காவோ வழிகாட்டி வருகிறார். கால்நடை மருத்துவராக தன் பணியைத் தொடங்கிய இவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும், பின்னர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் உயிரி வேதியியல், நோய் எதிர்ப்பியல்,

நுண் கிருமியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்ற ‘சயின்ஸ்’ பத்திரிகைக்கு சமீபத்தில் ஜார்ஜ் காவோ பேட்டி அளித்திருக்கிறார். அப்பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவம் இது. ‘சயின்ஸ்’ இதழ் சார்பாக ஜார்ஜ் காவோவை நேர்காணல் செய்தவர், ஜான் கோகன். கோவிட் 19 வைரஸை தனிமைப்படுத்தியதில் சீனாவின் அணுகுமுறை என்ன..? மற்ற நாடுகள் சீனாவிடம் இருந்து எதனை கற்றுக் கொள்ள முடியும்? எந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது என்றாலும், குறிப்பாக நுரையீரல் மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான தொற்றுகளுக்கு, சமூக இடைவெளி என்பது மிக மிக அவசியம். இதை நாங்கள் ஐந்து முறைகளில் அமல்படுத்தினோம்.

1. மருந்துகள் அற்ற அணுகுமுறையை உருவாக்கினோம். இதுதான் முதல் படி. ஏனெனில் இந்த நோய்க்கு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை.

2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, விசேஷ மருத்துவ சிகிச்சையில் அவர்களை வைத்தோம்.

3. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தினோம். இதற்காக தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய பொறுமையாக அதிக முயற்சிகளை மேற்கொண்டோம்; நேரங்களை செலவிட்டோம்.

4. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுத்தோம்.

5. ‘லாக் டவுன்’ எனப்படும் மக்கள் நடமாட்டத்தை வெகுவாக கட்டுப்படுத்தினோம்.

மற்ற தேசங்கள் என்ன தவறுகளை செய்தன..?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் மிகப்பெரிய தவறு என நான் நினைப்பது மக்கள் முக கவசத்தை அணிவதில்லை என்பதுதான். நீர் திவலைகள் மூலமும் நெருங்கிய தொடர்பு மூலமும்தான் இந்த வைரஸ் பரவுகிறது. நீங்கள் பேசும்போது உங்கள் வாயிலிருந்து நீர் திவலைகள் வெளியில் வரும். எனவே முகக்கவசம் என்பது மிக மிக அவசியம். கோவிட் 19 வைரஸ் தொற்றுதலுக்கு ஆளான பலர், அந்த நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. எனவே அவர்களை அறியாமலேயே வைரஸை மற்றவர்களுக்கு பரப்புகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்றால் முகக்கவசம் அணிய வேண்டும். இது மட்டுமே ஒரே வழி.

சீனா மேற்கொண்ட மற்ற தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து மற்றும் அலுவலகங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சீனா மிகப்பெரிய அளவுக்கு தெர்மா மீட்டர்களை பயன்படுத்தியுள்ளது. இன்று சீனாவின் எந்தப் பகுதிக்கு நீங்கள் சென்றாலும் அங்கு தெர்மா மீட்டர்கள் இருப்பதைப் பார்க்கலாம். மக்களின் உடல் வெப்பநிலையை அடிக்கடி சரி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். இதற்காகத்தான் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு தெர்மா மீட்டர்களை சீனா பயன்படுத்துகிறது. இந்த வைரஸ் இயற்கைச் சூழலில் எவ்வளவு காலத்துக்கு உயிரோடு இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது அவசியம்.

இந்த வைரஸ் வெப்பத்தில் தாக்குப் பிடிக்காது என சிலர் எண்ணுகின்றனர். அது தவறு. இந்த வைரஸ் தன்னைத்தானே பாதுகாக்க கேடயத்தை உருவாக்கி கொண்டுள்ள வைரஸ் என்பதை நினைவில் கொள்வது நல்லது. அமெரிக்க / சீன ஆய்வுகளைப் பார்க்கும்போது இந்த வைரஸ் புறச்சூழலில் தன்னை அழிக்கும் சக்திகளிலிருந்து காத்து கொள்கிறது எனத் தெரிகிறது. பல இயற்கை சூழல்களில் உயிர்ப்புடன் இருக்கிறது. எனவே இது குறித்து அறிவியல் அடிப்படையிலான பதில்கள் நமக்கு தேவைப்படுகின்றன. வுஹான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போது, மிக குறைவான அளவுக்கு நோய் இருந்தவர்களும் கூட மிகப்பெரிய மருத்துவ வசதிகள் கொண்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்பத்தினர் அவர்களைப் பார்க்கக் கூடஅனுமதிக்கப்படவில்லை.

மற்ற தேசங்களும் இதனை கடைபிடிக்க வேண்டுமா?

தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எந்த தேசமாக இருந்தாலும் அதனை செய்தே ஆக வேண்டும். எங்கே தோன்றியதோ அதன் மூலாதாரத்தை அகற்றுவதன் மூலம்தான் கோவிட் 19 வைரஸை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அதனால்தான் நாங்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களை விசேஷ மருத்துவமனைகளாக மாற்றினோம். எப்பொழுது இந்த நோய் தொடங்கியது என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. முதல் நோயாளி டிசம்பர் முதல் நாளே கண்டுபிடிக்கப்பட்டார் என சில சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ‘சவுத் சைனா மார்னிங்க் போஸ்ட்’ என்னும் சீனாவை விமர்சிக்கும் ஹாங்காங் பத்திரிக்கை, நவம்பர் மாதமே நோய் உருவாகிவிட்டது எனக் கூறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

நவம்பர் மாதமே நோய்களை உருவாக்கும் குவி மையங்கள் தோன்றிவிட்டன என வாய்மொழியாகத்தான் சொல்லப்படுகிறது. இது குறித்து உறுதியான தரவுகள் இல்லை. நாங்கள் இதன் தோற்றம் குறித்த விவரங்களை புரிந்து கொள்ள முயன்று வருகிறோம். வுஹான் மருத்துவ அதிகாரிகள் வைரஸின் மையம் ஒரு கடல் உணவு விற்கும் சந்தை என மதிப்பிட்டு அந்த சந்தையை ஜனவரி 1ம் தேதி மூடினர். அதாவது அந்தச் சந்தையில் விற்கப்பட்ட ஒரு விலங்கின் மாமிசத்திலிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கும் என நினைத்தார்கள். ஆனால், நோய் தொற்றிய முதல் ஐந்து பேரில் நான்கு பேருக்கு அந்த கடல் மாமிச உணவு சந்தையுடன் தொடர்பு இல்லை என உங்களது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

கடல் உணவு விற்பனையகம் தோற்றுவாயா அல்லது வேறு இடத்தில் தோன்றி அந்த விற்பனையகத்தில் வைரஸ் பெருகியதா? இது நல்ல கேள்வி. தொடக்கத்திலிருந்தே ஒவ்வொருவரும் அந்த விற்பனையகம்தான் வைரஸின் பிறப்பிடம் என எண்ணுகின்றனர். என்னைப் பொறுத்த வரை அந்த இடம் வைரசின் பிறப்பிடமாக இருக்கலாம். அல்லது அந்த இடத்தில் வைரஸ் பெருகியிருக்கலாம். இரண்டு சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஜனவரி 20ம் தேதி வரை இது மனிதர்களுக்கு இடையே பரவும் தன்மை கொண்டது என சீன விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. இதனை உணர்வதில் அப்படி என்ன முட்டுக்கட்டைகள் இருந்தன?

மிக விவரமான உறுதியான நோய் பரவல் தரவுகள் உடனடியாக கிடைக்கவில்லை. தொடக்கத்தில் இதுவும் பல வைரஸ்கள் போல ஒரு வழக்கமான வைரஸ்தான் என அனைவரும் நினைத்தனர். நாங்கள் ஒரு கொடூரமான, கணிக்க இயலாத, மறைந்திருந்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தோம். இதுதான் இத்தாலி அல்லது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலும் நிலைமை. சீனாவில் இந்த தொற்று அனேகமாக குறைந்துவிட்டது. இப்பொழுது உருவாகும் புதிய தொற்றுகள் என்பது வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களிடம்தான் என்பது சரியா?

ஆம்! இந்த தருணத்தில் உள்ளூர் மக்களிடம் தொற்று பரவல் இல்லை. இப்பொழுது தொற்று என்பது வெளியிலிருந்து வரும் பயணிகளிடமிருந்துதான்! தொற்று உள்ள பலர் சீனாவுக்குள் வந்தபடி இருக்கின்றனர். இந்த வைரசை ‘சீன வைரஸ்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அப்படி குறிப்பிடுவது நல்லதல்ல. இந்த வைரஸ் பூமிக்கு சொந்தமானது. எல்லா வைரஸ்களும் பூமிக்குத்தான் சொந்தமானவை. கோவிட் 19 என்னும் இந்த வைரஸ் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் விரோதமானது. எந்த ஒரு தனி மனிதனுக்கும், தேசத்துக்கு மட்டுமே இந்த கோவிட் 19 எதிரி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

புகைப்பிடிப்பதால் ஆபத்து

கொரோனா வைரஸ் பாதிப்பில் புகை பிடிக்காதவர்களை காட்டிலும், புகை பிடிப்பவர்கள் கடுமையான அபாயத்தில் உள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கிய பிப்ரவரியில் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன்” இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், சீனாவில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 1099 கொரோனா தொற்று நோயாளிகளில் 173 பேருக்கு மிகவும் கடுமையான பாதிப்பு இருந்தது. அவர்களில் 16.9 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பவர்கள். 5.2 சதவீதம் பேர் புகை பிடித்தலை கைவிட்டவர்கள். இரண்டாவதாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நோயாளிகளில் 11.8 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பார்கள். 1.3 சதவீதம் பேர் புகைபிடிப்பதை கைவிட்டவர்கள்.

கவலைப்படக்கூடிய விஷயமாக சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களில் 25.5 சதவீதம் பேர் அப்போது புகைபிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தவர்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ் பரவலின்போதும் புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகை பிடித்தவர்கள் தொற்றுநோய்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. மெர்ஸ் வைரஸ் பரவலின்போது தென் கொரியாவில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாதிக்கப்பட்ட புகைபிடித்த நோயாளிகள் உயிர்தப்பிய எண்ணிக்கை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் மயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் ஜே. டெய்லர் ஹேஸ் பேசுகையில், “சீனாவில் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் புகை பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்” எனக் கூறுகிறார். தற்போது இச்செய்தியை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் புகைபிடித்தால், அதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள்; உங்களுக்கு தெரிந்த யாராவது புகைபிடித்தால் அவர்களையும் தடுத்து நிறுத்துங்கள். “ஒரு குறுகிய காலத்திற்கு புகை பிடிப்பதை விடுபவர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, கடுமையான நுரையீரல் பாதிப்பு இல்லாத பெரும்பாலான புகை பிடிப்பவர்கள் அதனை நிறுத்தினால் உடல்நலத்தில் முன்னேற்றங்களை காண்பார்கள். மேலும், கொரோனா வைரஸ் உள்ளிட்ட கடுமையான வைரஸ் தொற்றுக்கு வாய்ப்பு குறையும்” எனக் ஜே. டெய்லர் ஹேஸ் கூறியுள்ளார்.

Related Stories:

>