×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை கடைபிடிக்காமல் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க 50 ஈகிள் டீம்: எஸ்பி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் சாலையில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க ‘50 ஈகிள் டீம்’ படையை எஸ்பி சிபிசக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடையை கடைபிடிக்காமல் சாலையில் சுற்றுவோரை கண்காணிக்க பல நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாகன தணிக்கை நடத்தப்பட்டு தடையை மீறி வருவோரின் வாகனங்கள் பறிமுதல், வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இருப்பினும் போலீஸ் கண்காணிப்பு உள்ள முக்கிய சாலைகளை தவிர்த்துவிட்டு ஊரக சாலைகள் மற்றும் நகரின் இணைப்பு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தி கண்காணிக்க ‘50 ஈகிள் டீம்’ எனும் போலீஸ் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுழல் விளக்கு பொருத்தப்பட்ட 50 இருசக்கர வாகனங்களில் தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளார். அதையொட்டி மொத்தம் 50 கண்காணிப்பு வாகனங்கள் தயார் படுத்தப்பட்டது. இதனை எஸ்பி சிபிசக்கரவர்த்தி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும் கிராமப்பகுதிகளில் தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாலிபர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்த ‘ஈகிள் டீம்’ எனும் கண்காணிப்பு ஏற்படுத்தி இருக்கிறோம்.

ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் ஒரு எஸ்ஐ ரோந்து பணியில் ஈடுபடுவார். காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ச்சியாக இந்த கண்காணிப்பு நடைபெறும். இருசக்கர வாகனத்தில் சென்று கண்காணிப்பவரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்புகொள்ள வாக்கிடாக்கி வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். மேலும் அவர்களுடைய வாகன வழித்தடம் இணையம் மூலம் கண்காணிக்கப்படும். எனவே அவர்களுடைய பயணமும் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரமும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எங்களால் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Eagle Team ,SP ,Thiruvannamalai district , 50 Eagle , Traffickers ,Thiruvannamalai, District
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...