×

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை உயிருடன் மீட்பு: பவானிசாகர் வனத்தில் விடப்பட்டது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு பவானிசாகர் வனத்தில் விட்டனர். புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது  தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த சிறுத்தை, நாயை அடித்துக்கொன்றதால் சிறுத்தையை பிடிக்க பவானிசாகர் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை சண்முகம் தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்ட சண்முகம் எட்டிப்பார்த்தபோது கிணற்றில் சிறுத்தை தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார், வனத்துறை கால்நடைமருத்துவர் அசோகன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கிணற்றில் தத்தளித்த ஆண் சிறுத்தையை வலை போட்டு பிடித்து மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தனர். பின்னர், பவானிசாகர் அருகே தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். வனப்பகுதியில் கூண்டை திறந்துவிட்டதும் சிறுத்தை கூண்டிலிருந்து வெளியே குதித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

Tags : forest ,Sathyamangalam ,Bhavanisagar ,Bawanisagar Forest , Satyamangalam,well Male leopard,
× RELATED வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான்