×

விருதுநகரில் புது முயற்சி வீடு தேடி பலசரக்கு தரும் போலீஸ் பிரண்ட்ஸ் குழு

விருதுநகர்: பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பொதுவெளிகளில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், வீடு தேடி வரும் பலசரக்கு திட்டத்தை விருதுநகர் போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.  கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், சமூக பரவலை தடுக்க மக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அரசு தெரிவித்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதை தவிர்க்கவேண்டும் என விருதுநகர் ஏஎஸ்பி சிவபிரசாத் வலியுறுத்தியுள்ளார். வீடுகளுக்குத் தேவையான பலசரக்கு வாங்குவதற்காக விருதுநகர் மெயின்பஜாரில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, மளிகை பொருட்கள் வாங்க வருவோர், தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி, முகவரி மற்றும் செல்போன் எண்ணையும் குறித்து, பலசரக்குக் கடைகளில் கொடுத்து விட்டு சென்று விடவேண்டும்.
கடைகளில் பொருட்கள் தயாரானதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் மூலம் வீடுகளை தேடி மளிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.  பொருட்கள் பெற்றுக் கொண்டு மக்கள் தரும் பணம் கடைகளில் சேர்க்கப்படுகிறது. இந்த நடைமுறையால் விருதுநகர் மெயின் பஜாரில் மக்கள் கூட்டம் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை நகரின் அனைத்து குறுகிய தெருக்களில் உள்ள  கடையினரும் பின்பற்ற வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : group ,Virudhunagar ,police friends ,home , group, police friends,looking , home , Virudhunagar
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.