×

கொரோனா நிவாரண டோக்கன் வினியோகம் ரேஷன்கடை முன் திரண்ட மக்கள் கூட்டம்: நோய் தொற்று பரவும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் கொரோனா வைரஸ் பரவலை பற்றி, எவ்வித பயமுமின்றி, ரேஷன் கடைகளில் கொடுக்கும் நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வாங்க, பெரியகுப்பம் கடை எண் ஒன்றில் கூட்டம் கூட்டமாக பெண்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.  ‘கொரோனா’ வைரஸ் பரவாமல் தடுக்க, ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், அரசு சார்பில், நிவாரணமாக, கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும், ஆயிரம் ரூபாய் ரொக்கம், இன்று (ஏப்., 2) முதல் வழங்கப்படுகிறது.ரேஷன் கடைகளில் கூட்டம் சேர்க்கக்கூடாது என்பதற்காக, நாளொன்றுக்கு, 100 கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருள் வழங்க வேண்டும். காலையில், 50 பேருக்கு, மதியம், 50 பேருக்கு வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விட்டு, நிற்கும் வகையில், கடைக்கு முன், கட்டம் அல்லது வட்டம் வரைந்திருக்க வேண்டும். பொருள் வழங்கும் நாள், நேரம் குறிப்பிட்டு, அனைத்து கார்டுதாரர்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளின் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று, டோக்கன் வழங்காமல் கார்டுதாரர்களை ரேஷன் கடைக்கு நேற்று வரவழைத்து, டோக்கன் கொடுத்தனர். நோய் தொற்று பரவலை கண்டுகொள்ளாமல், ஏராளமான பெண்கள், முக கவசம் அணிந்து, கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து, சமூக இடைவெளியின்றி அந்த ரேஷன் கடைக்கு முன்பு  குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல், அங்கிருந்தவர்கள் திணறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  ஒரு நாளுக்கு 100 பேர் என கூறிவிட்டு, ஒரே நாளில் டோக்கன் பெற ஆயிரம் பேர் குவிந்தனர். வீடு வீடு வீடாக டோக்கன்: ரேஷன் கடையில் டோக்கன் கொடுப்பதால் ஏற்பட்ட நெருக்கடி, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கவனத்துக்கு சென்றது. அவர், வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு ‘’செம டோஸ்’’ கொடுத்தார். ‘’வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்காமல், அரசு உத்தரவை மீறி, ரேஷன் கடையில் கூட்டம் சேர்க்கிறீர்களா, நோய் தொற்று பரவும் என்பது தெரியாதா, விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்’’  என, கலெக்டர் அறிவுறுத்தினார். இதன்பின், அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, டோக்கன் கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Tags : Corona Relief Token ,front crowd , Corona Relief, Token, Issue
× RELATED மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!!