×

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வடசென்னையை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனை அலட்சியம்

தண்டையார்பேட்டை: தமிழ்நாட்டில் இருந்து கடந்த 19ம் தேதி ஆயிரத்து 450 பேர் டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் மாநாடு முடிந்ததும் கடந்த 24ம் தேதி சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது. விசாரணையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரிலிருந்து 16 பேர் கலந்து கொண்டனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்து தண்டையார்பேட்டையை சேர்ந்த 3 பேர், கொருக்குப்பேட்டையை சேர்ந்த 2 பேர், எழில் நகரில் ஒருவர், தண்டையார்பேட்டை டி.எச். ரோடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 7 பேரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வண்ணாரப்பேட்டை மின்ட் மாடர்ன் சிட்டியில் ஒருவர், மண்ணடியில் 3 பேர், ஏழு கிணறு பகுதியில் 3 பேர், கொத்தவால்சாவடி பகுதியில் 3 பேர், பெரியமேடு, புதுப்பேட்ைட பகுதிகளை சேர்ந்த 6 பேர் என 16 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வௌியானால் தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த செய்யது முகமது (33) மற்றும் ஹர்ஷித் (22) என்பவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காமல் வெறும் மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் டெல்லி மாநாட்டிற்கு கலந்துகொள்ள சென்றோம். நாங்கள் கொரோனா பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் அங்கு எங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் வெறும் மாத்திரைகள் மட்டும் கொடுத்து அனுப்பினர். அரசு ஒருபக்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டுகின்றனர் என்றனர்.

பெண்கள் திடீர் சாலை மறியல்

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சமுதாய நல கூடத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 10க்கும் மேற்பட்டவர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் வடசென்னை பகுதிக்கு கொண்டு வரக்கூடாது எனக்கூறியும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேர் கும்மாளம்மன் கோயில் தெருவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து. நீதிமன்ற துறை துணை ஆணையர் சுந்தரவடிவேல், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.


Tags : North Chennai , Coronavirus test, 23 people ,North Chennai, Hospital negligence in treatment
× RELATED வடசென்னை பாஜ வேட்பாளர்...