×

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய திருவொற்றியூரை சேர்ந்தவர் மருத்துவமனையில் அனுமதி: வீட்டிற்கு ஸ்டிக்கர்

திருவொற்றியூர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை டெல்லியில் நடந்த முஸ்லிம் அமைப்பின் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டில் பங்குபெற்றவர்கள் பற்றி மத்திய, மாநில அரசுகள் தீவிர விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து 1,131 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு 515க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்தல், மற்றவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், திருவொற்றியூர் தியாகராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததாக திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் நேற்று காலை தியாகராயபுரத்திற்கு சென்று, அங்கு மாநாட்டில் கலந்து கொண்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் பங்கேற்றதை ஒப்புக்கொண்டார். அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டி வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags : Delhi Convention Returning to Delhi Convention , Returning, Delhi Convention
× RELATED டெஸ்லா ஊழியர்கள் 14,000 பேர் பணி நீக்கம்