×

தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு: வைரலாகும் வீடியோ

சென்னை:  டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 57 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா நோய் தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களில் 500 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இந்த சூழ்நிலையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 18 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியாக மேடவாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட எந்த டெஸ்ட்டும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்த 18 பேரை தனிமைப்படுத்தியும் இதுவரை கொரோனா டெஸ்ட் எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பேசிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே தமிழக சுகாதாரத்துறை அலட்சியம் காட்டாமல் உடனடியாக நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். டெஸ்ட் எடுக்காதபட்சத்தில் பல்வேறு இழப்புகளை தமிழகம்  சந்திக்கும் நிலை உருவாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Corona Test , Tamil Nadu, Corona, Test not taken
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...