×

கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த செயற்பொறியாளர் தலைமையில் குழுஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமனம்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செயற்பொறியாளர் தலைமையிலான ெபாறியாளர்கள் குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது வரை 17023 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டுமென்று சுகாரதாரத்துறை பொதுப்பணித்துக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில் 825 அரசு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களில் 50,852 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் 51 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் செய்து, அதற்கான மருத்துவ உபகரணங்களும் வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பொதுப்பணித்துறையில் மருத்துவ கட்டுமான பிரிவில் போதிய பொறியாளர்கள் இல்லை என்பதால் இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் மருத்துவ கட்டுமான பிரிவில் 5 கண்காணிப்பு பொறியாளர்கள், 13 செயற்பொறியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மூலம் கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்தும் வகையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனைகளுக்கு கூடுதல் வசதி மற்றும் அரசு கட்டிடங்களில் மருத்துவமனை போன்று படுக்கை வசதிகள் தயார் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் பொதுப்பணித்துறை மருத்துவ கட்டுமான பிரிவுக்கு கூடுதல் பொறியாளர்களை நியமிக்க கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.   ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு செயற்பொறியாளர் வீதம் 2 உதவி செயற்பொறியாளர்கள், 4 உதவி பொறியாளர்கள் கொண்ட குழு மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், மருத்துவமனை மற்றும் தற்காலிகமாக மருத்துவமனை போன்று மாற்றப்பட்டுள்ள அரசு கட்டிடங்களில் தேவையான வசதிகளை செய்து தருவார்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : team ,district , Corona, Practitioner, Federal Department of Health
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...