×

மலேசியா, டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்றவர்களால் உலகம் முழுவதும் குண்டாய் சிதறும் கொரோனா: நிஜாமுதீன் பகுதியில் 2,100 பேர் வெளியேற்றம்

புதுடெல்லி: மலேசியா, டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்றவர்களால், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருந்து நேற்று 2,100 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் தொடங்கப்பட்ட முஸ்லிம் மத அமைப்பான தப்லிக் ஜமாத்தின் உலகளவிலான கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் 4 நாட்கள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மலேசிய நாட்டினருடன் இந்தியா, தாய்லாந்து, இந்தோனோஷியா, சீனா எனப் பல நாடுகளிலிருந்து சுமார் 15,000 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தாக்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 900 பேரில் பாதிபேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் மூலம் அந்தந்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவிற்கு அடுத்தபடியாக டெல்லியின் நிஜாமுதீன் பகுதி மசூதியில் மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்கள் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனோஷியா போன்ற நாடுகளிலிருந்தும், 20 மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து சுமார் 1,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இதில் பங்கேற்ற சுமார் 285 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இது தவிரத் தமிழகம், கர்நாடகா, காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவரும் பிலிப்பைன்சை சேர்ந்த ஒருவரும் இறந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு நபர்கள் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். இவர்களுக்கும் இவர்களுடன் தொடர்பிலிருந்த சிலருக்கும் கொரோனா தாக்கியுள்ளது. டெல்லி அரசு, மதக் கருத்தரங்கு நடந்த நிஜாமுதீன் பகுதியிலிருந்த 163 பேரை கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்த மதகுரு மவுலானா சாத் மற்றும் நிர்வாகிகள் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லி நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற நிலையில் அவர்களால் அந்நாட்டில் கொரோனா பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ஏற்கனவே மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து, கம்போடியா, புரூனே, இந்தோனேஷியா ஆகிய  நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கொரோனா தாக்கியுள்ளது.  கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி சங்கிலித் தொடர் போன்ற நோய் பரவலுக்குக் காரணமாகி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொற்று பரவல் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ் கவலையுடன் கூறியுள்ளது.

டெல்லி கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் அந்தமான் 21, அசாம் 216, பீகார் 146, ஹரியானா 130, இமாச்சல 17, ஹைதராபாத் 55, கர்நாடகா 45, கேரளா 15, மகாராஷ்டிரா 109, மேகாலயா 5, மத்தியப் பிரதேசம் 107, ஒடிசா 15, பஞ்சாப் 9, ராஜஸ்தான் 22, ஜார்க்கண்ட் 34, தமிழ்நாடு 67, உத்தரபிரதேசம் 157, மேற்கு வங்கம் 73 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் நாடு முழுவதும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை மாநில நிர்வாகம் தேடி வருகிறது.  தப்லிஹி ஜமாத் நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் விசா வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மத கருத்தரங்கு நடந்த இடத்தில் தங்கியிருந்த 2,100 பேர் வெளிேயற்றப்பட்டனர். இவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா நோய்தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,657 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, மத்தியப் பிரதேசத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 18 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று 29 மாநிலங்களுக்கு பரவியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் புதியதாக பாதிப்புக்கப்பட்டுள்ளனர்.

280 வெளிநாட்டினருக்கு விசா தடை
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி ‘தப்லிஹி ஜமாத்’ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் வரை, 2,100 வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்கள், முதல் கட்டமாக, டில்லியில் உள்ள தப்லிஹி ஜமாத் தலைமை அலுவலகத்துக்கு வந்து தங்கியுள்ளனர். பின் இவர்களில், 280 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவ இவர்கள், பலரிடம் தொடர்பில் இருந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

சுற்றுலா ‘விசா’வில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், விதிமுறைகளை மீறி மத கூட்டத்தில் பங்கேற்றதால், இவர்களது பெயர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும் காலங்களிலும் இவர்கள் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : Corona ,area ,seminar ,Corona: Nizamuddin ,Nizamuddin , Malaysia, Delhi, Religious Seminar, Corona, Nizamuddin
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...