×

செய்தி துளிகள்

21 நாள் கூலியை முன்பணமாக வழங்க சோனியா வலியுறுத்தல்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘நாடு முழுவதும் அமலில் உள்ள முழு ஊரடங்கால், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் 8 கோடி கிராமப்புற ஏழை தொழிலாளர்கள் வேலையின்றியும், வேறு வேலைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாமலும் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளனர். எனவே, அவர்களின் நலன் கருதி, 21 நாள் கூலியை மத்திய அரசு முன்பணமாக வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டப்பணிகள் தொடங்கிய பிறகு இத்தொகையை கழித்துக் கொள்ளலாம்,’ என்று கூறியுள்ளார்.

கிருமி நாசினி அடிக்கும்உபி. சர்க்கரை ஆலைகள்
இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் கரும்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா நேற்று அளித்த பேட்டியில், ``ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இங்கு செயல்படும் மூன்று சர்க்கரை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. முதல் கட்டமாக, ஆலைகளின் அருகே உள்ள கிராமங்களை அவர்கள் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதுவரை 12க்கும் மேற்பட்ட கிராமங்களை இவை சுத்தம் செய்துள்ளன. இது போன்று அனைத்து சர்க்கரை ஆலைகளும் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்,’’ என்றார்.

போலீஸ் தடையை மீறி தர்காவில் கூடிய மக்கள்
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் சூபி துறவி மொய்னுதீன் சிஸ்டியின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த தர்காவில் இருந்து சர்வாரில் உள்ள தர்காவுக்கு ஒவ்வொரு வருடமும் மலர் போர்வை காணிக்கையாக அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான மலர் போர்வை நேற்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், சர்வார் நிகழ்ச்சியில் 5 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி அளித்தனர்.  ஆனால், 100 பேர் வரை கூடி விட்டனர்.  

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் நாடு முழுவதும் தற்போது அதிகளவில் கொரோனா பரவி வருவதால், போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக்  கலைத்தனர்.

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு முட்டாள்தனமான முடிவு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சில சமயம் அரசு முட்டாள்தனமான ஆலோசனைகளை கேட்டு நடக்கிறது. பிபிஎப் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைப்பது தொழில்நுட்ப ரீதியாக சரியானதாகத் தோன்றினாலும், நிச்சயம் அதை செய்வதற்கான சரியான தருணம் இதுவல்ல. கொரோனாவால் வருமான பாதிப்பை சந்திக்கும் மக்கள், தங்களின் சிறுசேமிப்பில் கிடைக்கும் வட்டியை நம்பி உள்ளனர். எனவே, வரும் ஜூன் 30ம் வரை முந்தைய வட்டி விகிதம் தொடரும்படியாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

‘144’ஐ மீறி சுற்றியவர்கள் கழுதையில் ஏற்றி ஊர்வலம்
மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வர கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதை மதிக்காமல் பலர் வெளியே சுற்றுகின்றனர். இதனால் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தகாலி கிராம பஞ்சாயத்து கடுமையான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு முதல் முறை ரூ.500ம், இரண்டாம் முறை சிக்கினால் கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லவும் முடிவு செய்துள்ளது. இதனால் இப்போது இந்த யாருமே வெளியே வருவதில்லை.



Tags : Congress , 21 Day Cooley, Sonia, Modi, Corona Virus
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...