×

வீட்டு உபயோகத்துக்கான மானியமற்ற காஸ் சிலிண்டர் 64.50 குறைப்பு: சென்னையில் 761.50 ஆக நிர்ணயம்: வர்த்தக காஸ் சிலிண்டர் 99.50 சரிவு

சென்னை: நாடு  முழுவதும் நடப்பு மாதத்திற்கு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை  64.50 குறைந்து, சென்னையில் 761.50க்கும், சேலத்தில் 779 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 99.50 குறைந்து, சென்னையில் 1,402, சேலத்தில் 1,364 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும்  கச்சா  எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு,  இறக்குமதி செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும்  இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து சிலிண்டர் விலை  உயர்ந்து வருகிறது. ஆனால்,  பிப்ரவரி 12ம் தேதியில் திடீரென மானியமற்ற சிலிண்டர் அதிரடியாக  147 அதிகரித்தனர். இதனால், நாடு முழுவதும் சிலிண்டர் விலை கடும் உயர்வை  சந்தித்தது. எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய பட்ஜெட்டிற்காக 1ம் தேதி விலையை  ஏற்றாமல், 10 நாட்களுக்கு பின் விலையை அதிகரித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கடந்த மாதம் (மார்ச் 1ம்தேதி)  மானியமில்லா வீட்டு  உபயோக சிலிண்டர் விலை 55 குறைக்கப்பட்டது.

சென்னையில்   881க்கு விற்கப்பட்ட நிலையில்,  55 குறைக்கப்பட்டு, 826 ஆக  நிர்ணயிக்கப்பட்டது. இதுவே சேலத்தில் 898ல் இருந்து, 843ஆக   குறைந்தது. இதேபோல் மற்ற நகரங்களிலும் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ்  சிலிண்டர் விலையும், நாடு முழுவதும் 85 முதல் 88 வரையில்  குறைக்கப்பட்டது. சேலத்தில் பிப்ரவரியில் வர்த்தக சிலிண்டர்  விலை 1,551.50 ஆகஇருந்தது. அது மார்ச்சில்  88 குறைந்து, 1,463.50  ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் மானியமற்ற வீட்டு உபயோக சிலிண்டர் விலை 64.50வரையும், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை 99.50வரையும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மானியமில்லா சிலிண்டர் விலையானது டெல்லி 744, கொல்கத்தா 774.50, மும்பை 714.50, சென்னை 761.50, சேலம் 779 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் டெல்லியில் 1,285.50, கொல்கத்தா 1,348.50, மும்பை 1,234.50, சென்னை 1,402, சேலம் 1,364 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் முழுவதும், இந்த விலையில் தான்  சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக காஸ் சிலிண்டர் விலை  குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியம் எவ்வளவு? வெளிப்படை இல்லை
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ  சிலிண்டர் ஆண்டுக்கு 12 மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் சந்தை விலையில் வாங்க வேண்டும். இருப்பினும் 12  சிலிண்டருக்கு மானியம் நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. முன்பு எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலை மற்றும் மானியமற்ற விலை ஆகிய இரண்டையும் அறிவித்து வந்தன. ஆனால், சில மாதங்களாக சந்தை விலையை மட்டுமே தெரிவிக்கின்றன. சிலிண்டர் வாங்கிய பிறகுதான் வங்கிக் கணக்கில் மானியத்தை அறிந்து கொள்ள முடிகிறது. வெளிப்படையாக சந்தை விலையையும், மானிய விலையையும் தனித்தனியாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Chennai , Gas cylinder, Chennai, gas cylinder
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...