×

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்,.. பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு

* தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருந்து வைரஸ் தாக்குதல் ஆரம்பமானாலும், தற்போது அமெரிக்கா, இத்தாலியில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இதனால் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8 நாட்கள் ஊரடங்கு முடிந்து விட்டது. இன்னும் 2 வாரம் ஊரடங்கு நீடிக்கும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று அளித்த பேட்டி: வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருந்து வெளியில் வந்தவர்கள் எண்ணிக்கை 4,070. தமிழகத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. இதில் 11 அரசாங்கத்துக்கு சொந்தமானது. 6 தனியாருக்கு சொந்தமானது. இன்னும் 6 ஆய்வகங்களை இந்த ஒரு வாரத்திற்குள் கொண்டுவருவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். இதுவரை நாங்கள் ஆய்வு செய்த மாதிரிகள் 2,726.

இதில் 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதில் ஒருவர் பர்மாவையும், மற்றொருவர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்.
நேற்றுவரை (நேற்று முன்தினம்) இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஒரேநாளில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இந்த மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 234 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளவர்கள் 995 பேர். இதில் டெல்லி மாநாட்டில் இருந்து தானே முன்வந்தவர்கள் 515. இப்போது மொத்தமாக 1,103 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கையை ஏற்று தாமாகவே முன்வந்து எங்களது மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுத்துள்ளோம். மற்றவர்களுக்கு மாதிரிகள் எடுத்து வருகிறோம். நாளைக்குள் (இன்று) அனைவருக்கும் எடுத்துவிடுவோம். மற்றபடி வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் போதுமான அளவு எங்களிடம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களில் யாருக்கு கொரோனா
தொற்று உள்ளது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்.

மேலும், யார், யார், இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்ற விவரங்களை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 1,103 பேருக்கு நெருங்கியவர்களை கண்டறியும் பணியை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆரம்பித்து விட்டனர். அவர்கள் வீட்டைச் சுற்றி 7 அல்லது 8 கிமீ தூரத்தில் உள்ளவர்களை கண்டறிந்து, 50 வீட்டிற்கு ஒரு ஆள், அதில் 4 பேருக்கு ஒரு சூப்பர்வைசர் அமைத்து கண்காணிக்கும் பணி நடக்கிறது.   இதன்மூலம் மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். தனியார் மருத்துவமனைகள் நிறைய மூடப்படுவதாக வந்த தகவலையடுத்து, அவர்களிடம் ஏதாவது பிரச்னை உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் கர்ப்பிணி பெண்கள் கடந்த 2 மாதத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தனி திட்டம் வைத்துள்ளோம். அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளுக்காக தனி திட்டம் வகுக்க கூறியிருக்கிறோம். யார், யார் தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளார்களோ, அவர்களுக்கு சுகப்பிரசவம் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கூறியிருக்கிறோம். வீட்டிலேயே இருக்கும் வயதானவர்கள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் முடிந்த அளவு தனிமையாக இருக்க வேண்டும். முற்றிலும் வெளியே வரக்கூடாது. வெளியில் சென்று வருவோரும், அவர்களிடம் செல்லக்கூடாது. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அரசு உங்களின் நண்பர், உங்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் வசித்த பகுதியில் வீடு, வீடாக சென்று ஏதாவது அறிகுறி இருக்கா என்பது குறித்தும் ஆய்வு செய்கிறோம். சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள யாரும் வெளியில் வரக்கூடாது, உள்ளே செல்லக்கூடாது. மேலும் சுற்றுப்பகுதிகளில் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  நேற்று கண்டறியப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களில் இருக்கின்றனர். அவர்களில், திருநெல்வேலியில் 6 பேர், கோயம்புத்தூரில் 28, ஈரோட்டில்-2, தேனி-20, திண்டுக்கல்-17, மதுரை-9, திருப்பத்தூர்-7, செங்கல்பட்டு-7, சிவகங்கை-5, தூத்துக்குடி-2, திருவாரூர்-2, கரூர்-1, காஞ்சிபுரம்-2, சென்னை-1 திருவண்ணாமலை-1 என மொத்தம் 110 பேர்.

  இந்த மாநாட்டில் இருந்து வந்தவர்கள் 19 மாவட்டத்தில் இருக்கின்றனர். 1,103 பேருக்கு சோதனை நடத்தப்படும். ஒருநாளைக்கு 5 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய முடியும். எத்தனை பேர் சிகிச்சைக்கு வந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.

டெல்லி மாநாடு சென்ற 190 பேருக்கு கொரோனா:
டெல்லி மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் தங்கியுள்ளனர். 1131 பேர் தமிழகம் திரும்பியதாக கூறப்பட்டது. அதில் நேற்று முன்தினம் வரை 513 பேர் வரை கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் டெல்லி சென்று திரும்பிய மீதம் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்தது. மொத்தமாக 1103 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதில் இதுவரை 658 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் மொத்தமாக டெல்லி சென்று திரும்பியவர்கள் 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 110 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. மீதம் உள்ள 445 பேருக்கு நேற்று இரவு மற்றும் இன்று காலையில் பரிசோதனை நடந்து வருகிறது. இன்று மாலை அவர்களுக்கான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமல் இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.Tags : Tamil Nadu ,participants ,Corona ,conference ,Delhi , Tamil Nadu, Corona, Delhi Conrad
× RELATED தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று