×

இப்போதைக்கு நிம்மதி; கடைசியில் அவதி 3 மாதத்துக்கு பின் மாத தவணைமட்டுமல்ல, வட்டியும் எகிறும்

* 8 முதல் 10 மாத தவணைகள் அதிகரிக்கும்
* 6 லட்சம் கடனுக்கு 19,000 அதிகம் கட்டணும்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி, வங்கிகள் வழங்கும் இஎம்ஐ சலுகையை பயன்படுத்தினால், 8 முதல் 10 மாதம் கூடுதலாக இஎம்ஐ செலுத்த வேண்டிவரும்.
   கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 3 மாத இஎம்ஐ தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற ரிசர்வ் வங்கி சலுகையை அறிவித்தது. இதன்படி சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் அனுப்பி வருகின்றன. இந்த சலுகையை 3 விதமாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மார்ச் தவணை ஏற்கெனவே செலுத்தியிருப்பதால், எஞ்சிய 2 மாத வட்டி மட்டும் செலுத்தலாம். அல்லது, மார்ச் தவணையை திரும்ப பெற்று 3 மாத சலுகையை பயன்படுத்தலாம். பின்னர் அந்த தொகையை இஎம்ஐயில் அதிகரிக்கலாம் அல்லது தவணை காலத்தை நீட்டிக்கலாம்.

உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  1.3.2020 முதல் 31.5.2020 வரையிலான 3ம மாதத்துக்கு வாடிக்கையாளர்கள் சலுகையை பயன்படுத்த விரும்பினால் அதற்கான படிவத்தை இ-மெயிலில் அனுப்பி விலக்கு பெறலாம். இருப்பினும், வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக வாகன கடன் ₹6 லட்சம் வாங்கி, 54 மாதங்கள் தவணை பாக்கியிருந்தால் சுமார் 19,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். வீட்டு கடனாக  இருந்தால், 15 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்தும் வகையில் 30 லட்சம்  வாங்கியவர்கள், 8 மாத தவணை அதிகமாக அதாவது, சுமார் 2.34 லட்சம் கூடுதலாக  செலுத்த வேண்டிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடன் தொகை  மற்றும் தவணைக்கு, கடன் வாங்கியவரின் வயது ஆகியவற்றுக்கு ஏற்ப இது  மாறுபடும். உதாரணமாக வீட்டுக்கடன் 50 லட்சத்தை 9% வட்டிக்கு  வாங்கியவர் 20 ஆண்டில் திருப்பிசெலுத்துவதாக இருந்து 19 ஆண்டு பாக்கி இருந்தால், இஎம்ஐ 674 அதிகரித்து 45,660 செலுத்த வேண்டிவரும். 2 மாத வட்டி மட்டும் என்றால் 73,534 கட்ட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி மட்டுமின்றி, பல பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்  இந்த சலுகையை வழங்க முன்வந்துள்ளன. ஆனால்,  சலுகையை பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தற்போதைக்கு நிம்மதி  அடைந்தாலும், கடன் முடிவுறும்போது அதிக தொகையை இழக்க வேண்டி வரும் என வங்கி  அறிவிப்புகளின் மூலம் தெரியவருகிறது.

எஸ்எம்எஸ், இ-மெயில்: இந்த சலுகையை பயன்படுத்த வங்கிகள் சில இ-மெயில் அனுப்ப கோரியுள்ளன. சில வங்கிகள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, எஸ் அல்லது நோ (ஆம் அல்லது இல்லை) என பதில் அளிக்க கோரியுள்ளன.

ரிசர்வ் வங்கி உத்தரவிடுமா?
பொருளாதார மந்தம் மற்றும் ஊரடங்கால் தொழில்துறைகள் கடும் நஷ்டத்தில் தவிக்கின்றன. இந்த நேரத்தில், வட்டி தள்ளுபடி செய்தால்தான் ரிசர்வ் வங்கியின் சலுகையால் பலன் உண்டு. இல்லாவிட்டால், சலுகை அளித்தும் வட்டி உயர்வதால் கடன் சுமைதான் கூடும். எனவே, வட்டி தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிடுமா என சிறு தொழில், நடுத்தர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Avadi , Reserve Bank, EMI, Installments
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்