×

பட்டு.. பட்டு என்று உலக மக்களை வைரஸ் தாக்கும் நிலையில் கொரோனாவுக்கே கெத்து காட்டும் இந்தியர் மரபணு

* மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பு சதவீதம் மிக குறைவு
* உறுதிபடுத்துகிறது சர்வதேச பொறியியல், பயோடெக்னாலஜி மையம்

புதுடெல்லி: கொரோனா வைரசுடன் அமெரிக்கா உட்பட 202 நாடுகள் மல்லுகட்டி வரும் நிலையில், இந்தியர்களின் மரபணு கொரோனா வைரசுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக, சர்வதேச பொறியியல், பயோடெக்னாலஜி மையம் தெரிவித்துள்ளது. அதனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொேரானா பாதிப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஜன. 10ம் தேதி சீனாவில் பற்றவைக்கப்பட்ட கொரோனா என்னும் வைரஸ் தீ, இன்று உலகம் முழுவதும் 202 நாடுகளில் பற்றி எரிகிறது. உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில் கொேரானா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், நாடுகள் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமலாகி உள்ளது. கட்டாய சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. வைரஸ் பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா, இன்று 4ம் இடத்தில் உள்ளது. ஆனால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.  பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இந்தியாவில் கடந்த 25ம் தேதி முதல் ஏப். 14ம் தேதி வரையிலான 21  நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது, இந்தியாவில் பாதிப்பு மிக குறைவாகவே காணப்படுகிறது. ஜன. 29ம் தேதிதான் முதன்முதலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதே தேதியில் இத்தாலியிலும் முதல் கொரோனா பாதிப்பு உறுதியானது. இவ்விரு நாடுகளையும் இன்று ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், பலமடங்கு இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசின் குறிப்பிடத்தக்க மரபணு அம்சங்களை அடையாளம் காண டெல்லியில் உள்ள சர்வதேச பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி சென்டர் (ஐ.சி.ஜி.இ.பி) முடிவு செய்தது. அதற்காக, பல்வேறு புவியியல் அமைப்பு கொண்ட இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து SARS-CoV2 மரபணுக்கள் குறித்த பூர்வாங்க ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்தியாவில் SARS-CoV2-ன் தாக்கம் குறித்து, ‘ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி’ என்ற தலைப்பில் ஆய்வு கட்டுறை வெளியானது.

அதில்,  SARS-CoV2-ல் ஒரே ‘ஹோஸ்ட் மைக்ரோஆர்என்ஏ’ (மைஆர்என்ஏ) மட்டுமே உள்ளது என்று பகுப்பாய்வு மூலம் வெளிப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் தினேஷ் குப்தா கூறியதாவது: எங்கள் பகுப்பாய்வின் அடிப்படையில், SARS-CoV2 நோய்த்தொற்றில் இந்தியாவின் மரபணுவில் ‘miR-27b’-இன் ஒரு மைஆர்என்ஏ மட்டுமே உள்ளது. இதனை பயோடெக்னாலஜி துறை (டிபிடி), மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியன ஆதரித்துள்ளன. இது இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. ஒவ்வொரு நாட்டின் மரபணு தன்மையில் மாற்றங்கள் உள்ளன. புரதங்களுக்கான குறியீடான மரபணுக்களில் பிறழ்வுகள் இருந்தால், அவை வைரசின் உயிர்வாழ்வை பாதிக்கலாம். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆன்டிவைரல் ஹோஸ்ட்-மைஆர்என்ஏக்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். SARS-CoV2 மரபணு ஆராய்ச்சியில் ஒன்பது ஹோஸ்ட் மைஆர்என்ஏக்கள் உள்ளன.

இந்தியர்களின் மரபணு சோதனையின் அடிப்படையில், ஒரே தனித்துவமான மைஆர்என்ஏ தான் ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி-இன் SARS-CoV2 மரபணுவில் உள்ளது. எனவே, இந்திய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசாக மட்டுமே இருக்கும். மைக்ரோஆர்என்ஏக்கள் எல்லா மனிதர்களிடமும் உள்ளன. வைரஸ் மரபணுக்களுடன் பிணைக்கப்பட்டு அதன் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய ஆறு வைரஸ் தடுப்பு மைக்ரோஆர்என்ஏக்களில் ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி ஒன்றாகும். இந்த மைக்ரோஆர்என்ஏ இந்தியாவில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட SARS-Cov2 மரபணுவுடன் ஒத்துபோகிறது. இருப்பினும், இந்திய மரபணுவில் ஒரு தனித்துவமான பிறழ்வு இருப்பது உறுதியாகி உள்ளதால், குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, 2016ம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றவரும், ஆசிய காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் சொசைட்டியின் தலைவருமான டாக்டர் டி.நாகேஸ்வர ராவ் கூறியதாவது: இந்தியாவில் கொரோனாவின் மரபணு கட்டமைப்பில் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இது வைரசுக்கு எஸ்-புரதத்தின் ஒட்டுதல் திறனைக் குறைக்கிறது. இதன் பொருள் கொரோனாவின் கூர்முனை சீனாவில் இருந்ததைப் போல சக்திவாய்ந்ததாக இல்லை. இத்தாலியில் கொரோனா வைரசின் மரபணுப் பொருளில் மூன்று பிறழ்வுகள் நிகழ்ந்தன. அந்த மூன்று மாற்றங்களும் ஆபத்தானவை மற்றும் கொரோனா வைரசை மிகவும் ஆபத்தானதாக ஆக்கியது. இருப்பிடம், சூழல் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவில் (வைரஸ்கள், பாக்டீரியாவிலிருந்து மனிதர்களுக்கு) ஏதேனும் மாற்றம் இருந்தால், அதனை பிறழ்வு என்கின்றனர்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் பிறழ்வுகள் முக்கிய பங்கு வகித்தன. கொரோனா வைரசில் 29,903 நியூக்ளியஸ் தளங்கள் உள்ளன. அவை சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவிலும் இத்தாலியிலும் தொடர்ச்சியாக மாற்றங்களுடன் காணப்பட்டன. சீனாவின் வுஹானில் மர்மமான காய்ச்சல் பற்றிய செய்தி பரவியவுடன், ஆராய்ச்சியில் முன்னணி நாடுகளின் உதவியை உலக சுகாதார நிறுவனம் கோரியது. கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி சீனா, அமெரிக்கா, இந்தியா, இத்தாலி போன்ற 4 நாடுகள் முக்கியமாக தொடங்கி உள்ளன. ஐதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரியல் ஆராய்ச்சி நிறுவனமும் இப்பணியை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் வெப்பத்தால் அகற்றப்படும் என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 32 டிகிரி செல்சியஸ் வரை தளர்வாக உள்ளது.

ஆரம்ப விசாரணையில் அதிக வெப்பநிலை கொரோனாவுக்கு ஆபத்தானது என்று சுட்டிக்காட்டியது. அதனால், இந்தியாவில் சராசரி வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியசை எட்டும் மே மாதம் வரை நாம் காத்திருக்க வேண்டும். இத்தாலியில் வித்தியாசமான உணவுப் பழக்கம் காரணமாக அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் ஏராளமான முதியவர்கள் உள்ளனர். ஆல்கஹால் பொதுவான வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் அப்படி இல்லை. இத்தாலியில், கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளது. தடுப்பூசி தயாரிப்பதை நோக்கி வேகமாக இந்தியா நகர்கிறது. இந்தியாவில், 16 மாதங்களில் தடுப்பூசி தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி
கடந்த 1953ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 10 முதல் 14 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பிசிஜி எனப்படும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. காச நோய் வராமல் தடுப்பதற்காக இந்த தடுப்பூசி போடப்பட்டது. காச நோய் பாதிப்பு குறைந்த நிலையில், 2005ம் ஆண்டுக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிசிஜி காசநோய் தடுப்பூசியை பயன்படுத்த சில நாடுகள் முடிவு செய்துள்ளன.

கொரோனாவை எதிர்க்கிறதா என்பதை அறிவதற்காக பிரிட்டன் மட்டுமின்றி, நெதர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் சோதனை முயற்சியில் இறங்க இருக்கின்றன. நெதர்லாந்தில் 1,000 சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை முயற்சிகள் வெற்றிபெற்றால், குறைந்த செலவில் சில மாதங்களுக்குள் இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

வெப்பநிலையும் சாதகம்
* ஜன. 29ம் தேதிதான் இந்தியா மற்றும் இத்தாலியில் முதன்முதல் கொரோனா பாதிப்பு நோயாளி அடையாளம் காணப்பட்டார்.
* SARS-CoV2 நோய்த்தொற்றில் இந்தியாவின் மரபணுவில் ‘miR-27b’-இன் 6ல் ஒரு மைஆர்என்ஏ மட்டுமே உள்ளது.
* கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி சீனா, அமெரிக்கா, இந்தியா, இத்தாலி போன்ற 4 நாடுகள் முக்கியமாக தொடங்கி உள்ளன.
* இந்தியாவின் அதிக வெப்பநிலை கொரோனாவுக்கு ஆபத்தானது.
* மேற்கத்திய நாடுகளின் உணவு பழக்கம், ஆல்கஹால் வாழ்க்கையின் ஒருபகுதியாக உள்ளது.
* கொரோனாவின் கூர்முனை சீனாவில் இருந்ததைப் போல இந்தியாவில் சக்திவாய்ந்ததாக இல்லை.
* இந்தியாவில், 16 மாதங்களில் தடுப்பூசி தயாரிக்கப்படும்.

Tags : Indian ,world , People of the World, Corona, Indian
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்