தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா எதிரொலி: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

லண்டன்: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜுன் 29-ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்க இருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43000-த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,792 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,43,271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,84,526 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா வான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டமும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக விம்பிள்டனை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ மாட்டோம் என்று போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். தற்போது கொரோனாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இது அவசியமானது. பயணக்கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் உலகம் முழுவதும் இருந்து வீரர்களும் ரசிகர்களும் லண்டனுக்கு வருவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்து முதல் முறை

ஜுன் 29 அன்று தொடங்குவதாக இருந்த விம்பிள்டன் போட்டியை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது. முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: