×

மதுரையில் 650 படுக்கைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றம்

மதுரை:  மதுரையில் அரசு மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது,  650 படுக்கைகளுடன் கொரோனா தனி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
 மதுரை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி மற்றும் தொண்டையில் தொற்றுடன் வருபவர்களை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சுமார் 650 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு சுகாதாரத்துறை செயலரிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டு, கடந்த இரு தினங்களாக இப்பணி நடந்தது. தற்போது, பணி முடிந்து, கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் என அனைவரும் நேற்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ``கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றுடன் வருபவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குத்தான் வர வேண்டும். இங்குள்ள ஒரு வார்டில் அனுமதித்து, மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்வர். கொரோனா உறுதியானால், அதற்கான தனி வார்டில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஒரே இடத்தில் கொரோனா வார்டு மாற்றப்பட்டதால், மற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழங்க முடியும்’’ என்றார்.

Tags : Super Specialty Hospital ,Corona Hospital ,Madurai Madonna , Super Specialty, Hospital, Madurai,Corona Hospital
× RELATED 160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு வந்த 10 ரயில் பெட்டிகள்