×

கொரோனா பாதிப்பு என வீடியோ வைரலானதால் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை: திருமங்கலம் அருகே பரிதாபம்

திருமங்கலம்: மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த 35 வயதானவர், கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய இவர், மதுரை, முல்லைநகரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். சளி, இருமல் மற்றும் சோர்வு காரணமாக இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சுகாதாரத்துறையினர் இவரிடம் விசாரணை நடத்தி சந்தேகத்தின்பேரில், அவரையும், தாயையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேலாக 108 ஆம்புலன்ஸ் வராததால், அந்த பகுதி மக்களே சரக்கு வாகனம் ஒன்றை தயார் செய்து இவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பலர் தங்களது வீடுகளில் இருந்து செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.  தொழிலாளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கும் தாயாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சரக்கு வாகனத்தில் தாய், மகனை ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ‘கொரோனாவால் பாதித்தவர்’ என்ற தலைப்பில் வைரலாக பரவியது.  இதனால் தொழிலாளி மன வேதனையடைந்தார். நேற்று முன்தினம் காலை மதுரையிலிருந்து நடந்து திருமங்கலம் வந்தார். கப்பலூர் டோல்கேட் அருகே மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு என வீடியோ வைரலானதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : suicide ,coroner , Woman commits,suicide, front, train , video goes viral
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை