×

நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடல்

* பைக் செல்லவும் அனுமதியில்லை
* தெரு முனையில் பொருட்கள் விற்பனை

நெல்லை: நெல்லையில் 22 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து நெல்லை மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டது. டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற பலருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 17 பேர் என கூறப்படுகிறது.  இதையடுத்து நெல்லை மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்க கலெக்டர் ஷில்பா நேற்று உத்தரவிட்டார்.அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் நகர பகுதியில் வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகம் பேர் திரும்பி வந்துள்ளனர். அப்பகுதியில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் இருந்து மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வண்ணம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். தெருக்களின் முனைகளில் மாநகராட்சி மூலமாகவும், வியாபாரிகள் மூலமும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும்போது போதுமான சமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் உள் தெருக்களில் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொருட்கள் வாங்க ஒருவர் மட்டுமே நடந்து சென்று வர அனுமதிக்க வேண்டும்.

உடல் நலக்குறைவு போன்ற அத்தியாவசிய தேவைக்கான மருத்துவ ஆவணங்களுடன் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களின் விவரங்கள், அவர்கள் மீண்டும் வீடு திரும்பும் விவரங்களை பாதுகாப்பு  போலீசார் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை தீவிரமாக போலீசார் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



Tags : Closure ,Corona Impact Canopy , Closure, routes, Corona Impact Canopy,22 people overnight
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...