×

கொரோனா நோய் தடுப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் மறுப்பதா?: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பு தெரிவித்ததற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்கு எந்த அவசியவும் இல்லை என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மறுத்திருக்கிறார்.  ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதை முதல்வர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கூடுதலாக பெற்ற ஆளும்கட்சிக்கு சர்வாதிகார அணுகுமுறை வருவதற்கு எப்படி துணிவு வந்தது?. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுத்த தமிழக முதல்வரை வன்மையாக கண்டிக்கிறேன்.

 கேரள அரசு கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி ஒதுக்கியிருக்கிறது. மோடி அரசு ரூ. 15,000 கோடியும், தமிழக அரசு ரூ.3,000 கோடியும்  ஒதுக்கியிருக்கிறது. இத்தகைய குறைவான நிதியாதாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களையும் அச்சம், பீதியோடு வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிற அவர்களை எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

Tags : Chief Minister ,meeting , Chief Minister, party meeting,discuss coronavirus prevention
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...