×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனாவுக்கான தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்:மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனாவுக்கான தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அறக்கட்டளை தலைவரும், மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும் - தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் தேவையான நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய - மாநில அரசுகளுக்கு திமுக, தன்னாலியன்ற ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் உதவிகளையும், அறம் சார்ந்த முக்கிய கடமையாக எண்ணிச் செய்து வருவதை அனைவரும் அறிவர்.

அதன் தொடர்ச்சியாக, திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் இருக்கும் “கலைஞர் அரங்கத்தை”, கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
அரசு சார்பில் “கலைஞர் அரங்கத்தை” பயன்படுத்தி உரிய ஏற்பாடுகளை செய்ய வரும் அதிகாரிகளுக்கு, திமுகவின் சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எழுதிய இந்த கடிதத்தை சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் நேற்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை நேரில் சந்தித்து அளித்தனர்.


Tags : Theater ,Artist ,Chennai Corona ,Anna Knowledge Center ,Anna Palace , Chennai Anna Vidyalayam, Artist Theater, Corona, MK Stalin
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...