×

கொரோனா பலியில் சீனாவை முந்துகிறது அமெரிக்கா அடுத்த 30 நாட்கள் மிக மிக முக்கியமானது: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

* இத்தாலி, ஸ்பெயினில் ஒரே நாளில் 1700 பேர் சாவு

வாஷிங்டன்: கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கியுள்ள அமெரிக்கா, பலி எண்ணிக்கையிலும் சீனாவை முந்துகிறது. அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை தொட உள்ளது. கடந்த 5 நாட்களாக அங்கு நாள்தோறும் புதிதாக வைரசால் பாதிப்போர் எண்ணிக்கை 18 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 573 பேர் பலியாகி உள்ளனர். முதல் முறையாக பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியிருக்கிறது. மொத்த பலி 3,170 ஆகும். இதனால் பலி எண்ணிக்கையில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை (3,309)  முந்த உள்ளது அமெரிக்கா. ஏற்கனவே, வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கையில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேருடன் அமெரிக்கா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது.

தினமும் அங்கு கொத்து கொத்தாக மக்கள் மடிவதால், இறந்தவர்கள் சடலங்களை மொத்தமாக குளிரூட்டப்பட்ட லாரிகளில் ஏற்றி புதைக்க கொண்டு செல்லும் காட்சிகள் காண்போரை பீதி அடைய வைக்கிறது.  இன்னும் 2 வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா பலி உச்சகட்டத்தை அடையும் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அதிபர் டிரம்ப், ‘‘அடுத்த 30 நாட்கள் நமக்கு மிகுந்த சவாலான, மிக மிக முக்கியமான காலகட்டம். எனது முதல் நோக்கம் மக்கள் உயிரை காப்பதுதான். அடுத்ததுதான் பொருளாதாரம்.  நம் எதிர்காலம் நம் கையில்தான். நமது தியாகமும், நமது செயல்களுமே வைரசின் தலையெழுத்தையும் அதற்கு எதிரான நமது வெற்றியையும் நிர்ணயிக்கும்’’ என்றார்.

தற்போது அமெரிக்காவில் தினமும் 1 லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் நிலைமை கைமீறிப் போய்விட்டது.  ஒரே நாளில் இரு நாடுகளில் மட்டும் 1701 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 812 பேரும், ஸ்பெயினில் 849 பேரும் பலியாகி உள்ளனர். இத்தாலியில் மொத்த பலி எண்ணிக்கை 11,591 ஆக உள்ளது. ஸ்பெயினில் 8,189 பேர் இறந்துள்ளனர். இரு நாடுகளிலும் புதிதாக வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கை குறைவதும், குணமடைவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பதும் மட்டுமே ஆறுதலான விஷயமாக உள்ளது. ஈரானிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

8 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்காவில் 1.65 லட்சம், இத்தாலியில் 1.01 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் வைரஸ் பாதித்த 30 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1.1 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்
கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கிழக்கு ஆசியாவில் மேலும் 1.1 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. மேலும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 3.5 கோடி பேர், குறிப்பாக சீனாவில் மட்டும் 2.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீள்வதையும் தடுக்கும் என அதன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இப்பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் கடந்த 2019ல் 5.8 ஆக மதிப்பிடப்பட்ட நிலையில் 2020ல் 2.1 சதவீதமாக சரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. சீனாவின் வளர்ச்சியும் 2.3 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.


Tags : US ,China ,Trump ,sacrifice ,Corona ,Corona China , Corona kills, in China, US, President Trump
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்