×

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நெல்லை, குமரியில் சுற்றியது அம்பலம்: திருவனந்தபுரம் கலெக்டர் பயண வழித்தடத்தை வெளியிட்டார்

நாகர்கோவில்:  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆட்டோவில் வலம் வந்துள்ளதாக கேரள அரசு அவரது பயண விபரத்தை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நபர் சுற்றி வந்த பகுதிகளும், நேரமும் அடங்கிய ‘ரூட் மேப்’ ஒன்றை அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏதேனும் விபரங்களை தெரிவிக்க விரும்புகின்றவர்கள் அது தொடர்பான போன் எண்களில் விபரங்களை தெரிவிக்கலாம் என்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அதன்படி அந்த நபர் கடந்த மார்ச் 21ம் தேதி துபாயில் இருந்து EK542 விமானம் மூலம் சென்னைக்கு இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்து அங்கு தங்கியுள்ளார். 22ம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிங் பார்க் ஓட்டலில் சென்று தங்கியுள்ளார். பின்னர் 23ம் தேதி காலை 10 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தென்காசி வந்துள்ளார். அங்கிருந்து திருநெல்வேலியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு சென்று தங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நண்பருடன் புறப்பட்டு மறுநாள் 24ம் தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் வந்து அங்குள்ள நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார்.

அங்கிருந்து களியக்காவிளைக்கு 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் இரண்டு நண்பர்களுடன் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் ஒரு நண்பர் வீட்டிற்கு திரும்ப சென்றுள்ளார். 24ம் தேதி மாலை 4.30 மணிக்கு நெய்யாற்றின்கரை பஸ் ஸ்டாண்ட் வந்த அவரை அங்கிருந்து உள்ளூர் ஆம்புலன்ஸ் உதவியுடன் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அன்றே கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 24ம் தேதி மாலை 6 மணிக்கு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா கிளினிக்கில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஐஎம்ஜி ஹாஸ்பிடலுக்கும், பின்னர் 28ம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஐசோலேசன் வார்டிலும் அவரை சேர்த்துள்ளனர்.

இதில் அவர் பயணித்த ஆட்டோ அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் உடன் வந்த ஒருவரும் ஆட்டோ டிரைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட 9வது நபர் இவர் ஆவார். இவர் சுற்றி வந்த இடங்கள் தொடர்பான விபரங்கள் இவை ஆகும். இந்த நாட்களில் இந்த இடங்களில் இருந்தவர்கள் இது தொடர்பான மேலும் விபரங்களை 1077, 1056, 0471 2466828 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விபரங்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

Tags : Thiruvananthapuram Collector , Kerala, Corona, Paddy, Kumari
× RELATED யானை தாக்கி விவசாயி பலி