×

வெளியூர்ல இருந்து வர்றீங்களா...? கை, கால் கழுவிட்டு ஊருக்குள்ள வாங்க... ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளைஞர்கள் அதிரடி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூர்காரர்களை கை, கால்களை கழுவிய பின்னரே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது கோவிந்தமங்கலம் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கையற்கரசி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக கிராம எல்லையில் தடுப்பு அமைத்துள்ளனர். வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வரும் நபர்களை அங்கேயே நிறுத்தி, கிருமிநாசினி கலந்து வைத்துள்ள தண்ணீரில் கை, கால்களை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.

அதேபோல் உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் சென்றுவிட்டு திரும்புபவர்களும் இவ்வாறு கை, கால்களை கழுவிய பின்னர்தான் ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கிராமத்தில் உள்ள வீடுகள்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும், தேவையில்லாமல் வெளியில் சென்று சுற்றி திரிவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இளைஞர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Tags : house ,RS Mangalam ,Youth Action ,Hand ,town , RS Mangalam, Youth
× RELATED கொரோனா பரவலை கட்டுப்படுத்த...