×

போடிமெட்டில் பயங்கர காட்டுத்தீ: விலையுயர்ந்த மரங்கள் நாசம் விலங்குகள் பலி

போடி: போடிமெட்டு சாலை கழுகுமலையில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச்சாலையில் உள்ளது கழுகுமலை. மேற்குத்தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியான கழுகுமலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பற்றியது. கடும் வெயில் காரணமாக காய்ந்திருந்த புற்களில் பற்றிய தீ மளமளவென பற்றி மலை அடிவாரம் நோக்கி சுமார் 2 கிமீ பிடித்து எரிந்தது. தகவலறிந்ததும் போடி வனத்துறையினர் முந்தல் பீட் வனவர் விவின் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து பச்சை செடிகளை கொத்து, கொத்தாக பறித்து சாலையில் எறிந்து தட்டி அணைத்தனர்.

தொடர்ந்து 15க்கும் மேற்பட்டோர் மலையடிவாரத்தில் இறங்கி சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த காட்டுத்தீயில் வடக்குமலை, அருங்குளம், மரக்காமலை, ராசிங்காபுரம் மலைப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின. சில விலங்குகள் பலியாகியும், பல விலங்குகள் இடம்பெயர்ந்தும் போயின. இக்காட்டுத்தீ சாலையை கடந்து சென்றவர்கள் சிகரெட் பற்ற வைத்து எரிந்த தீக்குச்சியினால் பிடித்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போடி அருகே ராசிங்காபுரம் ஒண்டிவீரன்சாமி கோயில் மலையடிவார பகுதி மேலே உச்சலூத்து மெட்டுக்கு இடையே 9 பேர் காட்டுப்பாதையில் இறங்கி வந்த போது தேவர் குடுக்கல்லில் பற்றிய காட்டுத்தீயில் சிக்கி தாய், மகள்கள், பேத்தி என 4 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ அடிக்கடி பிடித்து வருகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் வனங்கள், வனவிலங்குகள் பாதுகாக்கப்படும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodemmetu, wildfire
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...