×

50 வீடுகளுக்கு 1 மாத வாடகை தள்ளுபடி: தொழிலதிபர் தாராளம்

நொய்டா: நொய்டாவை சேர்ந்த தொழில் அதிபர் தனது 50 வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒருமாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார்.கொரோனா வைரசை முன்னிட்டு ஏப்ரல் 14 வரை நாடு முடக்கப்பட்டுள்ளது. தொழில்கள் அத்தனையும் முடங்கியதால் அன்றாட கூலி தொழிலாளர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அத்தனை பேரும் திண்டாடி வருகிறார்கள். அவர்கள் நலனுக்காக மத்திய அரசு ₹1.70 லட்சம் நிவாரணம் அறிவித்து இருந்தாலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த முடக்கம் கடினமான நேரமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்தநிலையில் நொய்டாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் தனக்கு சொந்தமான 50 வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத வாடகை வேண்டாம் என்று அறிவித்து உள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:நொய்டா பரோலா கிராமத்தை சேர்ந்தவர் கவுஷால்பால். தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக அங்கு 50 வீடுகள் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். நாடு முடக்கப்பட்டதால் வேலை இல்லாமல் அவர்கள் வருமானத்திற்கு திண்டாடி வருகின்றனர். இதைப்பார்த்த கவுஷால் பால் தனக்கு சொந்தமான 50 வீடுகளில் உள்ள தொழிலாளர்களிடமும் இந்த மாத வாடகைப்பணம் வேண்டாம் என்று தெரிவித்து விட்டார். அவருக்கு இந்த 50 வீடுகளில் இருந்தும் மாதம் ₹1.50 லட்சம் வருமானம் வாடகையாக வந்து கொண்டு இருந்தது. ஆனால் கொரோனாவை முன்னிட்டு தொழிலாளர்கள் நலனுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்காக கவுஷால் பாலை பலர் பாராட்டி வருகின்றனர்.

Tags : businessman ,homes , 1 month rent ,discount, 50 homes,businessman generosity
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்