×

சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் காசியில் தங்கியிருக்கும் 235 தமிழக பக்தர்கள்: ராஜபாளையம் வியாபாரிகள் கர்நாடகாவில் தவிப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து காசி யாத்திரை சென்ற பக்தர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கோவை, திருப்பூர், சென்னை, கடலூர், மதுரை, தஞ்சை, புதுச்சேரியை சேர்ந்த 235 பேர் கடந்த வாரம் காசிக்கு சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் காசியிலேயே தங்கி உள்ளனர்.
அங்குள்ள திருப்பனந்தாள் காசி திருமடத்தின் குமாரசாமி மடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. காசியிலிருந்து  235 தமிழர்களையும் சொந்த ஊருக்கு அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் தவிக்கும் வியாபாரிகள்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த ராமசாமி உள்ளிட்ட 12 வியாபாரிகள் தனியாகவும், ஒரு வியாபாரி மனைவி மற்றும் குழந்தைகளுடனும் கடந்த 3 மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் வியாபாரத்திற்கு சென்றனர். எவர்சில்வர் பாத்திரங்களை தள்ளுவண்டியில் வைத்து தெருக்களில் வியாபாரம் செய்து வந்தனர்.இவர்கள் ஹசன் மாவட்டத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனவே கடந்த 24ம் தேதி முதல் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை.தனியார் தங்கும் விடுதியில் உள்ள இவர்களின் கையிருப்பு பணம் செலவாகிவிட்டது. தற்போது  உணவுகூட இல்லாமல் குழந்தைகளுடன் தவித்து வருவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் வெளியிட்டு, தமிழக அரசு தங்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : pilgrims ,Tamil ,Kashi ,hometowns ,home ,Rajapalayam ,Karnataka , 235 Tamil pilgrims, Kashi without,return home: Rajapalayam traders , Karnataka
× RELATED தேர்தலில் தோற்பதற்கென்றே ஆள்...