வென்டிலேட்டர் தயாரிக்க வாகன ஆலைகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: வாகன உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கலாம். கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்போது ஆக்சிஜன் அளிக்கும் வென்டிலேட்டர் பொருத்துவது அவசியம்.  அதனால் வென்டிலேட்டர் ேதவை அதிகரிக்கக்கூடும். இதை கருத்தில் கொண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை தயாரித்து கொடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், நிறுவனம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த 2 மாதத்தில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன.

நொய்டாவில் உள்ள அக்வா ஹெல்த்கேர் நிறுவனம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளன.

தற்போது 11.95 லட்சம் என்.95 முக கவசங்கள் இருப்பில் உள்ளன. கடந்த 2 நாட்களாக 5 லட்சம் முக கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. நேற்று 1.40 லட்சம் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) இன்னும் ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் என்-95 முக கவசங்களை தயாரிக்கவுள்ளது. மேலும் இரு உள்நாட்டு நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்-95 முக கவசங்கள் தயாரிக்கவுள்ளன. மேலும் 10 ஆயிரம் தனிநபர் பாதுகாப்பு உபகரனங்களை செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.

Related Stories:

>